சென்னை: குரூப் 2, 2ஏ காலி பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் தேர்வு நடைமுறையிலும் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, 2024க்கான ஓராண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது குரூப்-2, 2ஏ காலிபணியிடங்கள் 1,264லிருந்து 2,030 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு இருக்கிறது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தமிழ் தகுதித்தாள் தேர்வு மற்றும் பொதுப் பாடங்களுக்கான விரித்துரைக்கும்(டெஸ்கிரிப்டிவ்) முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செயப்பட உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான திட்டமும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரித்துரைக்கும் முறையில் தமிழ் தகுதித்தாள் தேர்வும், பொதுப்பாடங்கள், பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு, மொழிப்பாடங்கள் ஆகியவை ‘ஆப்ஜெக்டிவ்’ முறையில் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வு நடைமுறை மாற்றத்தை தேர்வர்கள் வரவேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே குரூப்-1 பதவிகளுக்கு 65 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணையில் 90 இடங்களாக காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்கிறது. இதுதவிர மேலும் சில பதவிகளுக்கான பணியிடங்களும், அதற்கான தேர்வு தேதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
The post குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு: தேர்வு நடைமுறையிலும் மாற்றம்; டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.