×

நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல், பழங்குடியினரை உயர்த்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையை அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் வாசித்தார்.

அதில் கூறி இருப்பதாவது: இன்று நாம் கூடியுள்ள வேளையில், இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது எனக் கருதுகிறேன். சமூகநீதிக்கான ஒளிவிளக்காக தமிழ்நாடு திகழும் மரபு 1921ம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது. விடுதலைக்கு பிறகு, இடஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு காரணம், ‘happenings in Madras’ என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதை இந்த சட்டத்திருத்தம் உறுதிசெய்தது. தற்போது, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% ஆக உள்ளது. இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவைவிடவும் கூடுதலாக தமிழ்நாட்டில் இது நடைமுறையில் இருக்கிறது.

குறிப்பாக, தொழில்முறை பட்டப்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதி செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம். மேலும், கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. தி.மு.கழகத்தின் சமூகநீதி கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதை கண்டு நான் உவப்படைகிறேன்.

அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல், பழங்குடியினரை உயர்த்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M K Stalin ,Chennai ,M. K. Stalin ,National Conference ,All India Social ,Justice ,Federation ,Delhi ,DMK ,President ,M.K.Stal ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...