- அனஸ்வரா ராஜன் ஃபிடனெஸ்
- அனஸ்வர ராஜன்
- டாக்டர்
- மஞ்சு வாரியர்
- மஞ்சுவாரியார்
- ஆதிராத்திரி
- சூப்பர் ஷரன்யா
- மைக்
- பிரணய விலாசம்
- ராஜன்
நன்றி குங்குமம் டாக்டர்
மஞ்சுவாரியர் நடித்திருந்த, உதஹரணம் சுஜாதா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனஸ்வரா ராஜன். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் தண்ணீர் மாதன் தினங்கள், ஆதிராத்திரி, சூப்பர் ஷரண்யா, மைக், பிரணயா விலாசம், நேரு போன்ற சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர், 2022 -இல் திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் கயல் சிவக்குமார் இயக்கிய குண்டர்கள் என்ற படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துவருகிறார். இளம் நடிகையான அனஸ்வர ராஜன் தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:
ஒர்க்கவுட்ஸ்
தினமும் அதிகாலையே எழுந்துவிடும் பழக்கம் உடையவள் நான். ஒரு மணிநேரம் யோகா செய்வேன். பிறகு ஜிம் சென்று உடற்பயிற்சிகள் செய்வேன். இது தவிர, நடனம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அடிப்படையில் நான் ஒரு கதகளி நடனக்கலைஞர் ஆவேன். சிறுவயதிலிருந்தே முறையாக நடனம் கற்றுக்கொண்டேன். எனவே, தினசரி தவறாமல் ஒரு மணி நேரமாவது நடனப் பயிற்சி செய்துவிடுவேன். இந்த நடனப்பயிற்சி என் உடலை ஒல்லியாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
யோகாப்பயிற்சி: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் நடனத்திற்கு அடுத்தபடியாக எனக்கு பெரிதும் உதவுவது யோகாப் பயிற்சி. குறைந்தபட்சம் தினசரி அரை மணிநேரமாவது யோகாப் பயிற்சி செய்துவிடுவேன். யோகாப் பயிற்சி என் மனதுக்கு அமைதிதருவதோடு, என்னை எந்த சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகாமல், சாந்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
டயட்
பொதுவாக நான் பெரிய டயட் எல்லாம் பின்பற்றுவதில்லை. அதேச மயம், ஆரோக்கியமான உணவுகளையே பெரும்பாலும் எடுத்துக்கொள்வேன். அதில் அரிசி சாதம் குறைவாகவும், காய்கறிகள் அதிகளவிலும் எடுத்துக்கொள்வேன். அதுபோன்று அவ்வப்போது சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் அதிக அளவில் எடுத்துக் கொள்வேன்.
வீட்டில் என் அம்மா சமைக்கும் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். அம்மா தயாரிப்பில் மீன்கறி, சிக்கன், குலாப் ஜாமூன் போன்றவை பிடிக்கும். அதிலும், குலோப் ஜாமூனுடன் ஐஸ்க்ரீம் வைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுபோன்று நான் சமீபத்தில், அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவு என்றால், அது சென்னையில் மெரினா கடற்கரைக்கு சென்றபோது அங்கு பொரித்துக் கொடுத்த மீன் மிகவும் பிடித்திருந்தது. அது மிகவும் சுவையாக இருந்தது. நான் பொரித்தது, வறுத்தது என்று எந்த உணவை சாப்பிட்டாலும், அதற்கேற்றவாறு உடற்பயிற்சிகள் செய்து அதனை சமன் செய்துவிடுவேன்.
பியூட்டி: பொதுவாக, சூட்டிங் நேரத்தைத் தவிர, நான் மேக்கப் செய்து கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எனது சொந்த விஷயங்களுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எந்தவித மேக்கப்பும் இல்லாமல்தான் செல்வேன். மற்றபடி எனது இளமையான தோற்றப் பொலிவுக்குக் காரணம் தேங்காய் எண்ணெய்தான். தினசரி குளிப்பதற்கு முன்பு அரைமணிநேரம் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொள்வேன். அதுபோன்று எங்களது சமையலிலும் தேங்காய் அதிகளவில் பயன்படுத்துவதால், இயற்கையாகவே என் சருமம் பளபளப்புடன் காணப்படுகிறது.
மேலும், காலை எழுந்ததுமே 1 டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டுத்தான், யோகா, தியானப் பயிற்சிகள் மேற்கொள்வேன். அவ்வப்போது தண்ணீர் நிறைய குடிப்பதும் கூட எனது சருமத்தை வறண்டுவிடாமல், ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதோடு, சருமத்துக்கு மினுமினுப்பையும் தருகிறது.
இது தவிர, எனது தினசரி, மேக்கப் என்றால், சன் ஸ்கிரின், மாய்ச்சுரைஸ் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். அடுத்தபடியாக காஜல், லிப் பாம் இருக்கும் அவ்வளவுதான். கடவுள் அனுகிரகத்தாலே எனக்கு இயற்கையாகவே நல்ல ஸ்கின் அமைந்துள்ளது. தலைமுடி பராமரிப்பு என்றால், உங்களுக்கே தெரியும் கேரளா பெண்கள் எல்லாருக்குமே பெரும்பாலும், தலைமுடி நல்ல வளமாக இருக்கும். அதற்குக் காரணம், தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதுதான். எங்கள் வீட்டிலும் அப்படித்தான் எல்லாருமே சருமப் பொலிவுக்கும், தலைமுடிக்கும் அதிகளவில் தேங்காய் எண்ணெயே பயன்படுத்துவோம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.