×

தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய மோடி, ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து விடுவார்கள். பின்னர் அதனை ஊடுருவல்காரர்களிடம் கொடுத்து விடுவார்கள். அதேபோல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகளும் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை. என்டிஏ கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி என்பதை தெரிந்துதான் மோடி இப்படி எல்லாம் பேசுகிறார்.

தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துகின்ற அளவிற்கு பேசுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார். மதக் கலவரம் நடத்தி அதன் மூலம் தேர்தலை நடத்தி முடித்துவிடலாமா என்ற எண்ணத்தில் பேசினாரா என சந்தேகம் ஏற்படுகிறது. இதுவரை இருந்த பிரதமர்களிலேயே கீழ்த்தரமான பேச்சை மாற்றி மாற்றி பேசும் பிரதமர், மோடியை தவிர வேறு யாரும் இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்தார்.

The post தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,R. S. Bharati ,Chennai ,PM ,Rajasthan ,Congress ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...