*தேசிய அளவில் 46வது இடம் பிடித்து சாதனை
சேலம் : நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு தமிழக அளவில் 4வது இடமும், தேசிய அளவில் 46வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்கலைக்கழகங்களின் கீழ் ஆயிரக்கணக்கான உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் பணிகள், கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை, ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன.
அதன்படி, கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு, வரும் 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் திறன், ஆசிரியர்களின் நலன் மற்றும் மேம்பாடு, பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல், வேலை வாய்ப்புகள், உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள், தலைமைத்துவம், நிர்வாகத்தகுதி, ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 700 மதிப்பெண்ணுக்கு, தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், கல்வி நிறுவனங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளன. அதன்படி, தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற அரசு கல்லூரிகளில், சென்னை மாநில கல்லூரி 519 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் 3வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி ஆகியவை முறையே, மாநில அளவில் 2 மற்றும் 3வது இடம் பிடித்துள்ளன. இந்த வரிசையில் சேலம் அரசு கலைக்கல்லூரி 421 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 4வது இடத்தையும், தேசிய அளவில் 46வது இடத்தையும் பெற்றுள்ளது. இதனையடுத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு கல்லூரியின் முதல்வர் செண்பகலெட்சுமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:சேலத்தின் பழமை வாய்ந்த அரசு கலைக்கல்லூரி பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது. சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் தற்போது மத்திய, மாநில அரசின் முக்கிய பொறுப்புகளிலும், மக்கள் பிரதிநிதிகளாகவும் விளங்கி வருகின்றனர்.
தற்போது கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் கிடைத்துள்ளது. இதில் ஆசிரியரின் திறனுக்கான மொத்த மதிப்பெண்ணில் (200), அரசு கலைக்கல்லூரி 123 மதிப்பெண் பெற்றுள்ளது. இதேபோல், 100 மதிப்பெண்ணுக்கான ஆசிரியர்களின் நலன் மற்றும் மேம்பாடு பிரிவில் 54 மதிப்பெண்ணும், பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் பிரிவிற்கு 62 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்புகளுக்கு 58 மதிப்பெண்ணும், உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகளுக்கு 64 மதிப்பெண்ணும், தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தகுதிக்கு 60 மதிப்பெண்ணும் என மொத்தம் 421 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள தரவரிசை மதிப்பீடு அதற்கான சான்றாக விளங்குகிறது. அதேசமயம், வரும் ஆண்டுகளில் மேலும் முன்னேற்றம் அடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
The post உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சேலம் அரசு கலைக்கல்லூரி தமிழக அளவில் சிறப்பிடம் appeared first on Dinakaran.