×

புஞ்சை புளியம்பட்டியில் தரமற்ற மக்காச்சோள விதையால் விளைச்சல் பாதிப்பு

*உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி, அனையப்பாளையம், செல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். மூன்று மாத பயிரான மக்காச்சோளம் 8 அடி உயரம் வரை வளர்ந்து அறுவடைக்கு வரும் நிலையில் தரமற்ற விதையால் முளைப்புத் திறன் குறைந்து மக்காச்சோள பயிர் 2 அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக மக்காச்சோள பயிர்கள் குருத்து அழுகி காய்ந்த நிலையில் மஞ்சள் நிறத்தில் உள்ளதோடு, மக்காச்சோள பயிரில் கதிர்கள் பிடிக்காமல் (பிஞ்சுகள்) உதிர்ந்து விழுகின்றன.

மேலும், மக்காச்சோள பயிர்களில் முழுவதுமாக நோய் பரவியுள்ளதால் விவசாயிகள் மர்ம நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் வேளாண் துறையினர் இதுவரை அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்த நிலையில் தற்போது தீவன பயிருக்கு கூட பயன்படாத நிலையில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை மக்காச்சோள பயிர்களில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.தரமற்ற மக்காச்சோள விதை சாகுபடி செய்ததால் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதோடு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டு 70 நாட்கள் ஆன நிலையில் 8 அடி உயரம் வரை வளர வேண்டிய பயிர் தற்போது இரண்டு அடி உயரத்திற்கே வளர்ந்துள்ளது. காவேரி நிறுவனத்தின் தரமற்ற மக்காச்சோள விதையால் தான் இந்த பிரச்சனை. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது நன்கு வளர்ந்திருந்தால் 15 டன் மகசூல் வரும். தரமற்ற மக்காச்சோள விதையால் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஆகி உள்ளது.

வேளாண்மை துறையின் விதை சான்றிப்புத்துறை அதிகாரிகள் மக்காச்சோள விதைகளை முறையாக ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் விவசாயிகளுக்கு வந்திருக்காது. தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்த காவேரி நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post புஞ்சை புளியம்பட்டியில் தரமற்ற மக்காச்சோள விதையால் விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Puliambatti ,Sathyamangalam ,Pungampally ,Anayapalayam ,Chellampalayam ,Punjai Puliambatti ,Erode district ,Punchai ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...