×
Saravana Stores

கன்னியாகுமரி – காரோடு நான்கு வழிச்சாலையில் 60 பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்

*தட்டுப்பாடு இன்றி மண் கிடைக்குமா?

நாகர்கோவில் : கன்னியாகுமரி – காரோடு நான்கு வழிச்சாலையில் நீர் நிலைகளை மூடாமல் பாலங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் நான்கு வழிச்சாலை முடிவடைந்து 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என பணிகள் நடக்கின்றன. ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைய வில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் நான்கு வழிச்சாலை பணிகள் முக்கிய கருப்பொருளாக இடம் பெற்று இருந்தது. அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிப்போம் என உறுதி அளித்தனர். ஆனால் யார் வெற்றி பெற்று, இந்த திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க போகிறார்கள் என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரே தெரிய வரும்.

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளை பொறுத்தவரை பசுமை தீர்ப்பாய வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள் என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை தாண்டி தான் நடைபெற்று வருகிறது. நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் நகாய் சார்பில் நான்கு வழிச்சாலைக்காக குளங்களை மூடாமல், அதில் பாலங்கள் அமைக்கவும், சாலையின் ஓரங்களில் மரங்கள் வளர்க்கவும் உறுதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பணிகள் தொடங்கின. கடந்த 2023 ல் காவல்கிணறு பெருங்குடி முதல் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆனால் கன்னியாகுமரி – நாகர்கோவில் – காரோடு வரையில் மொத்தம் உள்ள 54 கி.மீ தொலைவில் ரயில்வே பாலம் மற்றும் தாமிரபரணியின் குறுக்கே பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றாலும், மீதமுள்ள சிறிய பாலங்கள் மற்றும் சாலை அமைக்க மண் கிடைக்காமல் பணிகள் தடைபட்டன. இந்நிலையில், பணிகளை மேற்கொண்ட எல்அண்ட் டி நிறுவனம் பணிகள் நடைபெறாமல் நஷ்டம் காரணமாக தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதனால், நான்கு வழிச்சாலை திட்டம் பாதியில் நின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டாலும், 3 முறை டெண்டர் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1041 கோடியே 30 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதனை இரு நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ளன. இரு ஆண்டுகளில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணிகள் தொடங்கின.

முதற்கட்டமாக பாலங்களை முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கின. இடையில் குமரி மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட டாரஸ் லாரிகளில் மணல் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாரஸ் லாரிகள் மாவட்டத்துக்குள் நுழைய வேண்டும் என்ற தடையும் வந்தது. இதனால் நான்கு வழிச்சாலைகள் மீண்டும் முடங்கின. பின்னர் இந்த பிரச்னை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நான்கு வழிச்சாலைக்காக பயன்படுத்தப்படும் டாரஸ் லாரிகள் அதற்கான சிறப்பு அனுமதி பெற்று மண் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பணிகள் வேகமாக நடைபெற்றன.

அந்த வகையில் கோதை கிராமம் பகுதியிலும், புத்தேரி – கனியான்குளம் இடைப்பட்ட பகுதி உள்பட பல்வேறு இடங்களில் குளங்களுக்கு மேல் சிறு, சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன. புத்தேரி உள்பட 6 பெரிய குளங்களுக்கு மேல் இன்னும் பெரிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. மேலும் தட்டுப்பாடு இல்லாமல் மண் கிடைத்தால் பணிகள் வேகமாக நடக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காரோடு – கன்னியாகுமரி இடையே ஆங்காங்கே 24 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் அமைப்பதுடன், 35 குளங்கள் உள்பட சிறிய மற்றும் பெரியது என 60 பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு, நிதி ஒதுக்கீடு பகுதி, பகுதியாக நடக்கிறது. இனி புதிய அரசு பொறுப்பேற்ற பின், இது தொடர்பாக பணிகளுக்கு முக்கியத்துவம் வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் 2026 க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர். குமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் இருந்து மழை தொடங்கும். எனவே மழை பாதிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களையும் சமாளித்து வேகமாக பணிகள் நடக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கன்னியாகுமரி – காரோடு நான்கு வழிச்சாலையில் 60 பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari-Karod four-lane ,Nagercoil ,Kanyakumari-Karod four-lane road ,India ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு