×

நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை: தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என பிரதமர் மோடியின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும்.

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல. இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகள் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேஷ கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Edappadi ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Modi ,Narendra Modi ,Rajasthan ,Banswara ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...