×
Saravana Stores

வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தை விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துகளை பறிமுதல் செய்து முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை, மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர்எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றம். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

The post வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Thirumavalavan ,CHENNAI ,Vishika ,Election Commission of India ,Banswara, Rajasthan ,
× RELATED ஒன்றிய அரசு மூத்த குடிமக்களுக்கு...