×

சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை: தமிழக காவலர் சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவிக்காக ரூ.31.52 லட்சம் நிதியை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் உடல் நலம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட சிகிச்சைக்கான தொகை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிகிச்சைக்காக விண்ணப்பித்திருந்த உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள், காவலர்கள், அமைச்சு பணியாளர் என 16 காவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து ரூ.30,77,494 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 16 காவலர் குடும்பத்திற்கு வழங்கினார். மேலும், 2023ல் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 12 காவலர் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கல்வி பரிசு தொகை ரூ.75 ஆயிரம் நிதியையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறை கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், துணை கமிஷனர் அதிவீரப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Commissioner ,CHENNAI ,Sandeep Rai Rathore ,Chennai Metropolitan Police ,Semanala ,Dinakaran ,
× RELATED ஒரு வார சிறப்பு சோதனை: கஞ்சா விற்ற 24 பேர் கைது