நன்றி குங்குமம் தோழி
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
யானை, பூனை, ஆடு, மாடு என எல்லா பாலூட்டி விலங்குகளின் குட்டிகளும் பிறந்த சில மணி நேரங்களில் எழுந்து நின்று நடக்க ஆரம்பித்துவிடும். ஆனால், மனிதக் குழந்தையோ எழுந்து நின்று நடப்பதற்கு ஒரு வயது ஆகிவிடும். இதற்குக் காரணம், மனிதர்கள் இரண்டு வருடம் சுமக்க வேண்டிய சிசுவானது, பத்து மாதத்திலேயே வெளியே வருவதுதான். இது பரிணாம வளர்ச்சியில் இயற்கையாக நிகழ்ந்தது. இந்நிலையில், குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலையில் மிக முக்கியமான தலை நிற்பது முதல் எழுந்து நின்று நடந்து ஓடுவது வரை உள்ள வளர்ச்சியையும், அதன் முக்கியத்துவத்தையும் இங்கே
காண்போம்.
குழந்தைகளின் வளர்ச்சி…
ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்ற உயரம் மற்றும் எடை கூடுவது மட்டும் முழுமையான வளர்ச்சி இல்லை. தலை நிற்பது முதல் நடப்பது, ‘ஊ’ சத்தம் எழுப்புவது முதல் சரளமாய் ஒரு முழு வரி பேசுவது, அம்மாவை பார்த்து சிரிப்பது முதல் மற்றவர்களிடம் சரளமாய் பழகுவது, பெரிய பொருட்களை கையாளுவது முதல் சிறு பொருட்களை நுணுக்கமாய் எளிதில் கையாள்வது வரை என உடல், மனம், மொழி, மூளை என எல்லா வகையும் கலந்ததுதான் முழுமையான வளர்ச்சி.
க்ராஸ் மோட்டார் ஸ்கிள்ஸ்…
உட்காருவது, நடப்பது, குதிப்பது, ஓடுவது, பந்தினை தூக்கி எரிந்து விளையாடுவது என பெரிய அசைவுகளை (movements) தான் ‘க்ராஸ் மோட்டார் ஸ்கிள்ஸ்’ (Gross motor skills) என மருத்துவத்தில் அழைக்கிறோம். இந்த வகை அசைவுகளுக்கு உடலின் பெரிய தசைகள் வலுவாய் இருப்பது அவசியம்.
வயதிற்கு ஏற்ற வளர்ச்சி…
முதல் இரு மாதங்களில்
* மேலே பார்த்து படுக்க வைத்தால் இரு பக்கமும் தலையை திருப்பி பார்த்தல்,
*கை, கால்களை உதைத்து விளையாடுதல்,
3 – 4 மாதங்களில்
*விரல்களை பிடித்து மேலே தூக்கினால் தலையை தூக்க முயற்சி செய்வது,
*ஒருக்களித்து கவிழ்தல்,
5 ஆவது மாதம்
*குப்புறக் கவிழ்வதும், பின் மீண்டும் முன்பு போல திரும்பி படுப்பதும்,
*கால் விரல்களை வாய்க்குக் கொண்டு வருவது,
6- 8 மாதங்களில்
*தனியாக உட்காருதல்,
*உட்கார்ந்து இருக்கும்போது கைகளை நீட்டி பொருட்களை வாங்குதல்,
9 – 11 மாதங்களில்
*தவழ்தல்,
*கையினை பிடித்தால் நடக்க முயற்சித்தல்,
11 – 12 மாதங்களில்
*ஒரு கை பிடித்து நடக்க முயற்சித்தல்,
*தனியாக ஒரு சில நிமிடங்கள் நிற்பது,
13 – 14 மாதங்களில்
*தனியாக நடப்பது,
*மாடிப்படிகளில் தவழ்தல்,
15 – 18 மாதங்களில்
*படிகளில் ஒரு கையால் பக்கச் சுவரையோ அல்லது கம்பியையோ பிடித்துக் கொண்டு ஏறுவது,
*நின்றுகொண்டு காலினால் பந்தினை உதைத்தல்,
இரண்டு வயதில்
*வேகமாக ஓடுவது,
*மாடிப்படிகளில் தனியாக ஏறி இறங்குவது,
*நின்ற இடத்தில் குதித்தல்,
மூன்று வயதில்
*மிதிவண்டி ஓட்டுதல்,
*பெரிய பந்தினை கேட்ச் பிடிப்பது,
*பத்து முதல் இருபத்தி நான்கு அங்குலம் வரை முன் பார்த்து குதித்தல்.மேலே சொன்ன விஷயங்களை சில குழந்தைகள் தாமதமாகவும், சில குழந்தைகள் முன்னதாகவும் செய்யலாம்.
இதில் ஆச்சர்யப்படவும், பயப்படவும் வேண்டியதில்லை. கொடுக்கப்பட்டுள்ள மாதங்களை தவிர, மேலும் இரண்டு மாதங்கள் வரை நாம் காத்திருக்கலாம்.
ஏன் முக்கியம்…?
*குழந்தை பிறந்த முதல் ஐந்து வருடங்களில் சகல விதத்திலும் அதிகமாக மூளை வளர்ச்சி நடக்கும் என்பதால், இக்கட்டத்தில் ‘க்ராஸ் மோட்டார் வளர்ச்சி’
தாமதமாகும் போது ஒட்டுமொத்த வளர்ச்சி படிநிலைகளும் பாதிக்கப்படும்.
பரிந்துரை…
*‘டம்மி டைம்’ (Tummy time) என இப்போது பிரபலமாக இருக்கும் ஒன்றை நாம் பின்பற்றலாம். அதாவது, குழந்தையை குப்புறப் படுக்க வைத்து விளையாட வைப்பது. இதனை நம் வீட்டுப் பெரியவர்கள் தங்கள் கால்களில் படுக்க வைத்து செய்வார்கள். எனவே, இது ஒன்றும் புதிதில்லை.
*ஒரு மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளை தினமும் முப்பது நிமிடங்கள் இவ்வாறு படுக்க வைக்க வேண்டும்.
*முதலில் இரண்டு நிமிடங்கள் என ஆரம்பித்து, சிறு சிறு இடைவெளி விட்டு தொடர்ந்து ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்களை முடிக்க வேண்டும். ஐந்து மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகள் எளிதில் பதினைந்து நிமிடங்கள் குப்புறப் படுப்பர்.
*வயதிற்கு ஏற்றவாறு பொம்மைகளை காண்பித்து, அவர்களுக்கு அந்நேரம் வேடிக்கை காட்ட வேண்டும்.
*குப்புறப்படுத்து தலையை மேலே தூக்கிப் பார்த்து கைகால்களை உதைக்கும் போது தசைகள் பலமாகும். இதனால் தலை நிற்பது, உட்காருவது, தவழ்வது,
நிற்பது என எல்லாம் எளிதில் விரைவாக குழந்தையால் செய்ய முடியும்.
தாமதமானால்…
மேலே சொன்ன வளர்ச்சிப் படிநிலைகளில் எதிலாவது தாமதம் ஏற்பட்டால், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரைக்கும் காத்திருக்கலாம். அதன்பின்னர் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைகள் எடுக்க வேண்டும்.ஆனால், தலை நிற்பதில் மட்டும் காலம் கடத்தாமல் ஐந்து மாதம் முடிந்து நிற்கவில்லையெனில், உடனே இயன்முறை மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனைகள் பெறவேண்டியது அவசியம்.
பக்கவிளைவுகள்…
நாம் எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் இருந்தால் நம் உலகம் சுருங்கிவிடும். விசாலமான யோசனைகள் நம்மிடம் இருக்காது. அதைப்போலவே குழந்தைகளின் தலை நிற்பது, உட்காருவது, தவழ்வது என எல்லாம் தாமதமானால் மற்ற வளர்ச்சிகள் பாதிக்கப்படும். உதாரணமாக,
*பேச்சு தாமதமாகும்,
*மற்ற குழந்தைகளுடன் எளிதில் பழக முடியாது,
*சிந்தனைத் திறன் குறையும்,
*ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு குழந்தையால் தானாக செல்ல முடியாததால், புது விஷயங்களை பார்த்து, உணர்ந்து, பேசி, விளையாடி, கேட்டு அனுபவிக்க முடியாது. இதனால் ஐம்புலன்களிலும் போதுமான முதிர்ச்சி இருக்காது
இயன்முறை மருத்துவம்…
தாமதம் எங்கிருந்து உண்டானதோ அங்கிருந்து உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து குழந்தைகளை மேம்படுத்துவர். அதாவது, தலை நிற்கிறது, அடுத்து உட்காரவில்லையெனில் உட்காருவதற்கான
பயிற்சிகளில் இருந்து ஆரம்பிப்பர்.இப்படி ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு வகுப்புகள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். முற்றிலும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் இந்த படிநிலைகளை அடைவதற்கு. இந்த வகை உடற்பயிற்சிகள் குழந்தைகளுக்கு பெரும் உடல் வலியினை உண்டாக்காது என்பதால், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம்.
மேலும் மூளையில் பாதிப்பு, மரபணுவில் பாதிப்பு என வேறு சில பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே இவ்வகை தாமதங்கள் ஏற்படலாம் என்பதால், அவர்களுக்கு முற்றிலும் குணமடைவதற்கு கூடுதல் வருடம் கூட ஆகலாம். வயிற்று தசைகள், முதுகு தசைகள், கால் தசைகள் என எல்லாவற்றையும் பலப்படுத்த பயிற்சிகள் வழங்கப்படும்.
முன்னெச்சரிக்கை…
தாமதமாகும் குழந்தைகளில் பத்தில் எட்டு பேர் ஆண் குழந்தைகள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே, பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் தாமதமாகத்தான் எல்லாம் செய்வார்கள் என நினைத்து மாதங்களை கடத்த வேண்டாம். அந்தக்காலத்தில் உன் அப்பா, அத்தை தாமதமாகத்தான் நடந்தார்கள் என வீட்டில் பெரியவர்கள் சொல்வதையும் கேட்டு, நாம் தாமதம் செய்தால் அடுத்தக்கட்ட வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்பதனை மனதில் பதியவைக்க வேண்டும்.
மொத்தத்தில் முத்தாய் பிள்ளைகளை வளர்த்திட முதல் ஐந்து வருடங்களும், அதற்கான போதிய வளர்ச்சியும் அவசியம் என்பதனை ஒவ்வொருவரும் பசுமரத்தாணி போல மனத்தில் பதித்து வைத்துக்கொண்டால், நம் வீட்டு முத்துக்களை எளிதாய் வளர்த்தெடுக்கலாம்.
The post வளரும் குழந்தைகளும்… அவர்களின் வளர்ச்சிகளும்! appeared first on Dinakaran.