×
Saravana Stores

நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக தனியார் பள்ளிகளில் விடிய விடிய காத்திருந்த பெற்றோர்

*ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்

நெல்லை : நெல்லையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்கேஜியில் சேர தனியார் பள்ளிக்கூட வாசல் முன்பு பெற்றோர் விடிய விடிய காத்திருந்தனர். இதுதொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி தனியார் பள்ளி சேர்க்கையில் 25 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த சேர்க்கை முறை 2013-2014 முதல் தொடங்கப்பட்டு குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் தனியார் பள்ளியில் சேர வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 சதவீத இடஒதுக்கீட்டில் தங்களது குழந்தைகளை எப்படியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து விட வேண்டும் என்ற போட்டி பெற்றோர் மத்தியில் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான எல்கேஜி சேர்க்கை நேற்று தொடங்குவதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதில் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க மே 20ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை https://rte.tnschools.gov.in/ என்ற இணைய தளத்திலும் நேற்று முதல் விண்ணப்பிக்கலாம். அதுபோல் அந்தந்த பள்ளிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக நெல்லையில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி சேர்க்கைக்காக அந்த பள்ளிக்கூட வாசல்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலர் காத்திருந்தனர். ஆனால் அவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளை பொருத்தவரை 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை என்பது 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த 1 கிலோ மீட்டர் பகுதியில் விண்ணப்பங்கள் 25 சதவிதத்திற்கு அதிகமாகப் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒருவேளை 1 கிலோ மீட்டர் தொலைவில் குழந்தைகளின் விண்ணப்பங்கள் குறைவாக இருந்தால் மட்டுமே மற்ற விண்ணப்பங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறவில்லை என்கின்றனர் நெல்லை மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரிகள். மேலும், தேவையில்லாமல் பனியிலும், வெயிலிலும் காத்திருக்காமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து எல்கேஜி அட்மிஷனுக்காக காத்திருந்த குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ‘ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது புரியாத புதிராக உள்ளது. பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பிக்கலாம், என்றால் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் ஒரே நாளில் விண்ணப்பங்கள் தீர்ந்து விட்டதாக கையை விரித்து விடுவார்கள். மற்ற நாட்களில் விண்ணப்பிக்க முடியாது. அதனால், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பள்ளிக்கூட வாசல்களில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது.’ என்றனர்.

The post நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக தனியார் பள்ளிகளில் விடிய விடிய காத்திருந்த பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : LKG ,Nella ,
× RELATED திருக்குறுங்குடியில் யானை...