×

சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர சம்பவம்; தாளமுத்து நடராஜன் கொலையில் சாட்சி விசாரணை நிறைவு: குற்றவாளிகள் தரப்பில் புதிய மனு தாக்கல்

சேலம்: சேலத்தில் 22 ஆண்டுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலையில் வழக்கு விசாரணை முடிவடைந்தது. குற்றவாளிகள் தரப்பின் புதிய மனுவால் விசாரணை வரும் ஜூன் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். சீலநாயக்கன்பட்டியில் உள்ள இவரது வீட்டில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி பவாரியா என்ற கொள்ளை கும்பல் நுழைந்து காவலாளி கோபாலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல் தாளமுத்து நடராஜனின் மகன்களை அடித்து காயப்படுத்தி விட்டு தனி அறையில் அடைத்து வைத்தது.

பின்னர் வீட்டில் இருந்து 250 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தாளமுத்து நடராஜன் இருந்த அறையின் கதவை தட்டியபோது, துப்பாக்கியுடன் வெளியே வந்த தாளமுத்து நடராஜனையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. பின்னர் டபுள் பேரல் துப்பாக்கி, கை துப்பாக்கி, நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் கொள்ளை கும்பலின் தலைவன் ஓம்.பிரகாஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில், மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் சேலம் மத்திய சிறையில் தற்போது அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய 4 பேர் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு சேலம் 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டதில் 2 பேர் தங்களது பக்கமும் சாட்சிகள் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் மனு போட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கை வருகிற ஜூன் மாதம் 5ம் தேதிக்கு நீதிபதி ராமஜெயம் தள்ளி வைத்தார்.

The post சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர சம்பவம்; தாளமுத்து நடராஜன் கொலையில் சாட்சி விசாரணை நிறைவு: குற்றவாளிகள் தரப்பில் புதிய மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Thalamuthu Natarajan ,Congress ,Salem Metropolitan District Congress Party ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...