×

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா ேதரோட்டம் இன்று காலை ேகாலாகலமாக நடந்தது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக தாயுமானவராய் வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சியும், சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று மாலை சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. அதிகாலை கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி மலைக்கோட்டை உள்வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான விநாயகர், வள்ளி தெய்வானை, சுப்பிரமணியர் ஒரு சப்பரத்திலும், சுவாமி- அம்பாள் (சோமாஸ்கந்தராக), மட்டுவார் குழலம்மை தனித்தனி தேர்களில் காலை 5.45 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

காலை 6.10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதையடுத்து சுவாமி தேரும், அம்மன் தேரும் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றது. தேர் முன் மேள வாத்தியங்கள் முழங்க லெட்சுமி யானை முன்னே சென்றது. சிலம்பம், கத்தி சண்டை போட்டவாறும், காளி, கருப்புசாமி, சிவன், பார்வதி உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் நடனமாடியபடியும், சிவனடியார்கள் பாடல்களை பாடி கொண்டும், பெண்கள் கைகளில் நந்தி கொடியுடன் ஆடி பாடி ஊர்வலமாக சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்கள் கீழ ஆண்டாள் வீதி, சின்னகடை வீதி, என்எஸ்பி ரோடு, நந்தி கோயில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக மலைக்கோட்டை வெளிவீதியில் பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தவாறு காலை 11 மணியளவில் நிலையை அடைந்தது.

இதைதொடர்ந்து மாலை வரை சுவாமியும், அம்பாளும் தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி சாமியை வழிபட்டனர்.இன்று காலை நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் இரவில் தேரில் இருந்து சுவாமி- அம்பாள் இறங்கி கோயில் ஆஸ்தான மண்டபம் சென்றடைகின்றனர். 27ம் தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வர் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chitrai Terotam Kolakalam ,Swami Temple ,Trichy Malaikot ,Tiruchi ,Chitrai Peruvija Tharotam ,Minister ,Ambil Mahesh ,South Kaylayam ,
× RELATED சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி...