×

400 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறி வாக்காளர்களை உளவியல் ரீதியாக திசை திருப்பும் பாஜக..? முதற்கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் சரிவால் பீதி

புதுடெல்லி: 400 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறி வாக்காளர்களை உளவியல் ரீதியாக திசை திருப்பும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் சரிவால் அக்கட்சி பீதியடைந்துள்ளது. கடந்த 19ம் தேதி தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தொகுதிகளில் உள்ள 2 லட்சம் வாக்குச் சாவடிகளில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளை கொண்டு ஆய்வு செய்கையில், கடந்த 2019ல் 70% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2024ல் 64% ஆகக் குறைந்துள்ளது.

முதற்கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன. அடுத்த வரும் கட்டங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. 2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் லட்சத்தீவில் நடந்துள்ளது. 2019ல் லட்சத்தீவில் 85.2% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 59% ஆகக் குறைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 2019ல் 82.1% ஆக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 67.7% ஆக குறைந்துள்ளது.

நாகாலாந்தில் 2019ல் 83% ஆக பதிவான வாக்குப்பதிவு, இந்த முறை 56.6% ஆக குறைந்துள்ளது. மணிப்பூரில் 2019ல் 82.7% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 69.2% வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் கடந்த முறை 53.6% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 48.5% வாக்குகள் மட்டுமே அதாவது 50%க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது வாக்காளர்களை சென்றடையவில்லை என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், ‘வாக்குப்பதிவு குறைந்துள்ளதை பார்க்கும் போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையாக கூட இருக்கலாம். குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ‘மோடி அலை… மீண்டும் பாஜக’ போன்ற கோஷங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

400 இடங்களுக்கு மேல் தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று உளவியல் ரீதியாக வாக்காளர்களை பாஜக திசை திருப்பி வருகிறது. அதனால் கூட, வாக்காளர்கள் மீண்டும் பாஜக வந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாக்களிக்க செல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வாக்களிக்க வராமல் தவிர்த்திருக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

ஆலோசனை கூட்டம்
முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்களை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது பரிசீலித்து வருகின்றனர். அடுத்த ஓரிரு நாளில் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அடுத்தடுத்து வரும் கட்ட தேர்தலில்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வாக்குப்பதிவை அதிகப்படுத்த அரசு சாரா நிறுவனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

The post 400 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறி வாக்காளர்களை உளவியல் ரீதியாக திசை திருப்பும் பாஜக..? முதற்கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் சரிவால் பீதி appeared first on Dinakaran.

Tags : BJP ,NEW DELHI ,19th ,Tamil Nadu ,Arunachal Pradesh ,Assam ,Bihar ,Chhattisgarh ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்