×

கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

சென்னை: கோடை விடுமுறை, அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமாகி உள்ளது. கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், “முதல்வர் தனிப்பிரிவில் 14417-ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.

இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக்கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்கவேண்டும் என்றும், தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..! appeared first on Dinakaran.

Tags : Department of Education of the School ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…