×

தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நரசிம்ம மேதா! மகாவிஷ்ணுவிடம், துவாரகா நாதரான கண்ணனிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர்; ஏழை! அதனால் என்ன? அந்தப் பக்தரின் புகழ், அவர் இருந்த ஊரெங்கும் பரவியது. (இவர் நரசிமேத்தா என்ற பெயராலேயே பலராலும் அறியப் பட்டதால், நரசிமேத்தா என்றே பார்க்கலாம்) அடுத்தவர் வாழ்ந்தால், ஐந்து நாட்கள் பட்டினி கிடக்கும் பொறாமைக் கும்பல் என்றும் உண்டு. அவர்களில் சிலருக்கு, நரசிமேத்தாவின் புகழ், எரிச்சலை உண்டாக்கியது. எந்த விதத்திலாவது நரசிமேத்தாவை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்தார்கள் அவர்கள். அதற்கு வாய்ப்பு அளிப்பதைப் போல, துவாரகைக்கு யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் சிலர், அந்த ஊருக்கு வந்தார்கள். வந்தவர்கள், அந்த ஊரில் தங்களிடம் இருந்த ஆயிரம் பவுனை, உண்டியல் பத்திரமாக மாற்ற விரும்பினார்கள்.

அதாவது, அங்கே ஆயிரம் பவுன்களைக் கொடுத்துவிட்டு, துவாரகையில் அதைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் அந்தஊரில் இருந்த இந்த வசதியை, ‘உண்டியல் பத்திரம்’ என்பார்கள். நரசிமேத்தா இருந்த ஊருக்கு வந்த யாத்திரிகர்கள், அந்த ஊரில் இருந்த ஒருவரிடம் போய், உண்டியல் பத்திரம் கேட்டார்கள். அவரும், அவரைச்சார்ந்த சிலரும் ஏற்கனவே, நரசிமேத்தாவிடம் பொறாமை கொண்டவர்கள்.

கேட்கவா வேண்டுமா?

உண்டியல் பத்திரம் கேட்ட யாத்திரிகர்களிடம் அந்தப் பொறாமைக்காரர்கள், ‘‘ஐயா! இப்போதெல்லாம் நரசிமேத்தாதான், இந்த உண்டியல் பத்திர வேலையை நன்றாகச் செய்து வருகிறார். நீங்கள் அவரிடம்போய், உண்டியல் பத்திரம் பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்று சொல்லி, நரசிமேத்தாவிடம் அனுப்பினார்கள். பக்தரோ ஏழை; அவர் போய், உண்டியல் பத்திரம் பெற்று, துவாரகையில் மாற்றிக் கொள்வது என்பது, நடக்கக்கூடிய காரியமா? நரசிம்ம மேத்தா அவமானப்படுவார் என்பதே, பொறாமைக் காரர்களின் எண்ணம். அதற்காகத்தான், உண்டியல் பத்திரம் கேட்ட யாத்திரிகர்களை நரசிமேத்தாவிடம் அனுப்பினார்கள். யாத்திரிகர்கள் நரசிமேத்தாவிடம் போய், உண்டியல் பத்திரம் கேட்டார்கள்.

அவர் மறுக்கவில்லை; ‘‘இது இறைவன் கட்டளை!’’ என்று தீர்மானித்தார்; யாத்திரிகர்களிடம் ஆயிரம் பவுன் பெற்றுக் கொண்டு, உண்டியல் பத்திரம் எழுதிக்கொடுத்தார். ரசிம்மமேத்தாவுக்குத் துவாரகையில், செல்வந்தர் யாரையும் தெரியாது. ஆனாலும், துவாரகையில் கண்ணனிடம் மாற்றும் படியாக, உண்டியல் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

அதைப் பெற்ற யாத்திரிகர்கள், துவாரகை சென்றார்கள். துவாரகை போன யாத்திரிகர்களை, ஒரு வியாபாரி வடிவில் பகவானே எதிர் கொண்டார். நரசிம்ம மேத்தா தந்த உண்டியல் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு, அதற்கு உண்டான பவுன்களை, பகவானே தந்தார். ஆம்! நரசிம்மமேத்தா கொடுத்த உண்டியல் பத்திரம், பகவானுக்குத்தான்! பக்தன் வேண்டுகோளைப் பகவான் நிறைவேற்றினார்.

தொகுப்பு: V.R.சுந்தரி

The post தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது! appeared first on Dinakaran.

Tags : God ,Kumkum Anmigam Narasimha Medha ,Lord ,Vishnu ,Kannan ,Dwarka ,Narasimetta ,
× RELATED தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை...