- நைட் ரைடர்ஸ்
- பெங்களூர்
- வில்
- ரஜத் விளாசல் வீன்
- கொல்கத்தா
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ஐபிஎல் லீக்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- ஈடன் கார்டன்ஸ்
- தின மலர்
கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஃபில் சால்ட், சுனில் நரைன் இணைந்து கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். வழக்கம் போல அதிரடியில் இறங்கிய சால்ட், பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளி ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்தார். மறு முனையில் நரைன் வழக்கத்துக்கு மாறாக அதிரடி காட்ட முடியாமல் திணறினாலும், கொல்கத்தா 23 பந்தில் 50 ரன்னை கடந்தது.
சால்ட் 48 ரன் (14 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சிராஜ் வேகத்தில் பத்திதார் வசம் பிடிபட்டார். நரைன் 10, ரகுவன்ஷி 3 ரன் எடுத்து யாஷ் தயாள் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 75 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது. வெங்கடேஷ் 16 ரன் (8 பந்து, 3 பவுண்டரி) விளாசி கிரீன் வேகத்தில் லோம்ரர் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷ்ரேயாஸ் – ரிங்கு சிங் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தனர். ரிங்கு 24 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஷ்ரேயாஸ் 50 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, கேகேஆர் 17.2 ஓவரில் 179 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. கடைசி கட்டத்தில் ஆந்த்ரே ரஸ்ஸல் – ரமன்தீப் சிங் ஜோடி அதிரடியில் இறங்க, கொல்கத்தா ஸ்கோர் 200 ரன்னை தாண்டி எகிறியது.
நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. ரஸ்ஸல் 27 ரன் (20 பந்து, 4 பவுண்டரி), ரமன்தீப் 24 ரன்னுடன் (9 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பந்துவீச்சில் கிரீன், யாஷ் தலா 2, சிராஜ், பெர்குசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. விராத் கோஹ்லி, கேப்டன் கோஹ்லி இணைந்து துரத்தலை தொடங்கினர். கோஹ்லி 18 ரன், டு பிளெஸ்ஸி 7 ரன் எடுத்து வெளியேற, பெங்களூரு 3.1 ஓவரில் 35 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், வில் ஜாக்ஸ் – ரஜத் பத்திதார் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 101 ரன் சேர்த்து ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.
இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். வில் ஜாக்ஸ் 55 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), ரஜத் பத்திதார் 52 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆர்சிபி மீண்டும் பின்னடைவை சந்தித்தது. கிரீன் 6, லோம்ரர் 4 ரன் எடுத்து நரைன் சுழலில் மூழ்க, பெங்களூரு 155 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து பரிதாப நிலையை எட்டியது. ஆனாலும், பிரபுதேசாய் – தினேஷ் கார்த்திக் ஜோடி உறுதியுடன் போராட… பெங்களூரு ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
பிரபுதேசாய் 24 ரன் விளாசி ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ரகுவன்ஷி வசம் பிடிபட்டார். கார்த்திக் 25 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் வேகத்தில் சால்ட் வசம் பிடிபட, ஆர்சிபி அணியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்ட நிலையில், மனம் தளராத விக்ரமனாக கர்ண் ஷர்மா 3 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அவர் 5வது பந்தில் ஸ்டார்க் வசமே கேட்ச் கொடுத்து வெளியேற, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது.
1 பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில், கவர் திசையில் பந்தை தட்டிவிட்ட பெர்குசன் முதல் ரன்னை பூர்த்தி செய்தாலும்… 2வது ரன் எடுக்கும் முயற்சியில் பரிதாபமாக ரன் அவுட்டானார். ஆர்சிபி 20 ஓவரில் 221 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேகேஆர் பந்துவீச்சில் ரஸ்ஸல் 3, நரைன், ஹர்ஷித் தலா 2, ஸ்டார்க், வருண் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கொல்கத்தா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியதுடன், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கும் முன்னேறியது. ஆல் ரவுண்டராக அசத்திய ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
The post 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி: ஆர்சிபி ஏமாற்றம்; வில், ரஜத் விளாசல் வீண் appeared first on Dinakaran.