×

வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைந்து: ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்போது உயிரிழப்புக்கு 2% வாய்ப்பு; மருத்துவர் தேரணி ராஜன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உரியினங்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக 100 டிகிரி பாரான் ஹீட் அளவிற்கு வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தபடியும், முகங்களை துணியால் மூடிக்கொண்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர பலர் வீட்டிலேயே முடங்கும் சூழல் உள்ளது. பலரும் மலை பிரதேசங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற பகுதிகளுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.
இன்னும் சில தினங்களில் கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அதன் தாக்கத்தின் எதிரொலியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெப்ப அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி அதிகரித்து வரும் வெயிலால் தமிழ்நாட்டில் பலருக்கும் உடல் சார்ந்த நோய்கள் வரதொடங்கியுள்ளது.

அவற்றில் ஒன்றுதான் ஹீட் ஸ்ட்ரோக். அதிகரிப்படியான வெப்பத்தை தாக்க முடியாமல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஓட்டு போட வரிசையில் காத்திருந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். வெயிலின் இந்த தாக்கத்தை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வழக்கமாக வட மாநிலங்களில் தான் இதுபோன்ற வெப்பநிலை அதிகரிப்பு உயிரிழப்பு என கேட்டு அறிந்துகொண்ட நமக்கு இந்த செய்திகள் அதிர்ச்சியை அளிக்கும் விதமாகவே உள்ளது. வயதானவர்களுக்கு இதுபோன்று ஏற்படுவது ஹீட் ஸ்ட்ரோக் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறியதாவது: நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போகும். இதன்காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஸ்ட்ரோக் ஏற்படும்போது 2% இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பார்ப்பதற்கு ஹார்ட் அட்டாக் போன்றுதான் தெரியும். ஆனால் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்னைதான் இது. இணை நோயான இதய கோளாறு, உடல் பருமன், நீரிழிவு நோயாளிகள் ஆகியோரும், மது அருந்திவிட்டு வெயிலில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். நிழல் உள்ள பகுதிக்கு அந்த நபரை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும். இறுக்கமான உடைகளை அவர் அணிந்திருந்தால் அதை நீக்க வேண்டும். அந்த நபரை மின்விசிறிக்கு கீழே இருக்க வைத்தல் வேண்டும் அல்லது அந்த நபரின் உடலில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். உடலை மீண்டும் நீரேற்றம் செய்ய நரம்பு வழி திரவங்கள் செலுத்துதல், வலிப்பு தாக்கங்களைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க மருந்துகள் அளித்தல், குளியல் அல்லது உடலை குளீரூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தல் ஆகியவை இதற்கான சிகிச்சைகள் ஆகும்.
வீண் பயணங்கள் வேண்டாம்.

வெயில் காலம் முடியும் வரை முடிந்த அளவிற்கு காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி செல்லும்போது முதலில் பாதிக்கப்படுவது சருமம். இதனால் கொப்புளங்கள், வியர்க்குரு, அதிக தாக்கத்தினால் அம்மை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் கூட அதிகமாக உள்ளது. மேலும் மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் போன்றவையும் வெயிலால் ஏற்படும். பயணத்தின்போது சிலர் முறையாக சுத்திகரிக்கப்படாத பாக்கெட் தண்ணீரை வாங்கி குடிப்பார்கள். இதனால் காலரா வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே சுத்தமான, காய்ச்சிய குடிநீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

தினமும் காலை மாலை என 2 நேரமும் குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும். தொளதொளவென ஆடை அணிவது, லைட் கலரில் உடை உடுத்துதல், முழுக்கை ஆடைகள் குறிப்பாக கதர் ஆடைகளை உடுத்திக்கொள்வது நல்லது. டீ, காபி குடிப்பதை விட்டுவிட்டு நல்ல குடிநீர், இளநீர், மோர், தர்பூசணி போன்று நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருங்கள். அதிக வியர்வை காரணமாக உடல் சோர்வு ஏற்படும். எனவே அதிக அளவில்தண்ணீரை குடிக்காமல் சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதுபோல குழந்தைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடலில் கொப்புளங்கள் அல்லது வேற் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் பார்க்காமல் மருத்துவரை அனுகுவதுதான் சரியான முறை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்
* தலைவலி
* அதிக ரத்த அழுத்தம்
* குமட்டல் மற்றும் வாந்தி
* சுயநினைவை இழத்தல், வலிப்பு ஏற்படுதல்
* இதயத்துடிப்பு அதிகரித்தல்
* மூச்சு வாங்குதல்
* மயக்கம் வருவது போன்று இருத்தல் மற்றும் குழப்பம் அடைதல்

The post வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைந்து: ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்போது உயிரிழப்புக்கு 2% வாய்ப்பு; மருத்துவர் தேரணி ராஜன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Doctor ,Terani Rajan ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்