×

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள், முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும், மற்ற வாகனங்களை கிருமி நாசினி தெளித்தே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகளை, சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் வகையில், அதிகாரிகள் புளியரையில் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (க்ளோரின்-டை-ஆக்சைடு) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

குமரி
கேரளாவில் இருந்து குமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் இருந்து கோழிகள் கொண்டுவரும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்றுவிட்டு வரும் கோழிப்பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி – கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

நாமக்கல்
கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோழிப்பண்னைகளுக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே, பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். நாமக்கல் பகுதியில் நிலவும் தட்ப வெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Kerala ,Tamilaga-Kerala border ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...