புதுடெல்லி: ‘பாஜ ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க தேர்தல் பத்திரம் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரம் மூலம் எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி தந்தது என்பது குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட எஸ்பிஐ வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்பிஐ வெளியிட்ட அந்த தகவல்கள் மூலம், பாஜ கட்சி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் பல நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வசூலித்தது வெட்ட வெளிச்சமானது. பாஜ ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம் திட்டம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே சமயம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட, தேர்தல் பத்திரம் திட்டத்தை பாஜ தலைவர்கள் தொடர்ந்து புகழ்கின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இதை ரத்து செய்ததற்காக பின்னாளில் வருத்தப்படுவார்கள்’ என கூறினார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை ரொக்கமாக தருவதை என்றுமே நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அனைவரும் ஏற்கும் வகையில் வேறு விதமாக திட்டத்தை கொண்டு வருவோம்’’ என கூறியிருந்தார். தற்போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருபடி மேலே போய், ‘மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வருவோம்’ என வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனாலும், மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். தேர்தல் பத்திரம் திட்டம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தது. எனவே நாங்கள் அனைத்து பங்குதாரர்களிடமும் விரிவான ஆலோசனை நடத்தி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அரசியலில் இருந்து கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவோம்’’ என்றார். நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
The post பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம்: நிர்மலா சீதாராமன் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.