×

இன்று தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை புறப்பாடு: ஏப்.23ல் வைகையில் இறங்குகிறார்

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்.23ல் நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை 6.25 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர்கம்பு ஏந்தி, சகல பரிவாரங்களுடன் தங்க பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பாக வையாழி ஆன பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார்.

புறப்பட்டது முதல் 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார். ஏப்.22ம் தேதி காலை 6 மணிக்கு மூன்று மாவடி பகுதியில், அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்னமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் திருவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றிக்கொண்டு இரவு 11.30 மணிக்கு வைகை ஆற்றிற்கு புறப்படுகிறார்.

ஏப்.23ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னர் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.24ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனம் முடிந்து காலை 11 மணிக்கு சேஷ வாகனத்தில், தேனுார் மண்டபத்தில் எழுந்தருளி, பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவாதாரம், ஏப்.25ம் தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு 11 மணிக்கு திருமஞ்சனம் முடிந்து ஏப்.26ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்பு வையாளியாகி அழகர் மலைக்கு திரும்புகிறார். ஏப்.27ம் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் கள்ளழகர் இருப்பிடம் வந்து சேர்கிறார். ஏப்.28ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post இன்று தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை புறப்பாடு: ஏப்.23ல் வைகையில் இறங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Thangapallak Alaghar ,Madurai ,Vaigai ,Kallagarkoil Chitrai Festival ,Alagarkoil, Madurai District ,Alaghar river ,
× RELATED குடிநீர் தொட்டியை கமிஷனர் ஆய்வு