×

தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ, ஹெச்.எம் சாவு: வாக்குச்சாவடியில் பெண் மயங்கி உயிரிழப்பு

சென்னை: புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம்(55). ஆலங்குடி போக்குவரத்து போலீசில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். தற்போது மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும்படையில் பணியில் இருந்த அவர் திருமயம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 11 மணி அளவில் சண்முகம் வீட்டுக்கு செல்வதற்காக திருமயம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.

அப்போது அவர் பஸ்சில் ஏற முயன்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார். தர்மபுரி வேடியப்பன் திட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(55). இவர் மல்லிகுட்டை ஊராட்சி, காமலாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

இவர், காரிமங்கலம் அடுத்த எட்டியானூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி 3 வது மைய அலுவலராக நேற்று முன்தினம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவு 10.30 மணியளவில் கணேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் அங்கேயே மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை கணேசன் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சார் வலசை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சாந்தி (35). இவர், மண்டபம் ஒன்றிய அரசு மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டுப் போடுவதற்காக நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு வந்தார். வரிசையில் நின்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு ெசல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ, ஹெச்.எம் சாவு: வாக்குச்சாவடியில் பெண் மயங்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : SSI ,Chennai ,Shanmugam ,Pudukottai Gandhi Nagar ,Alangudi Traffic Police ,Lok Sabha elections ,Thirumayam ,HM ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...