×

சொந்தமாக கார் கூட இல்லை அமித் ஷாவுக்கு ரூ.16 லட்சம் கடன்: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்

காந்திநகர்: குஜராத் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவரது பிரமாண பத்திரத்தில், சொந்தமாக கார் கூட இல்லை என்றும், சுமார் ரூ.16 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் 26ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், மே 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது.

இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. மொத்தம் 433 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், மீண்டும் காந்திநகர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சரியாக பிற்பகல் 12.39 மணிக்கு விஜய் முகூர்த்தத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது:

* 59 வயதாகும் அமித்ஷா பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு வரை படித்துள்ளார். விவசாய தொழில் செய்வதாகவும் சமூக சேவகர் என்றும் தன்னை குறிப்பிட்டுள்ளார்.

* கடந்த 2022-23ல் அமித் ஷாவின் ஆண்டு வருமானம் ரூ.75.09 லட்சம். அதே காலகட்டத்தில் அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.55 லட்சம்.எம்பிக்கான சம்பளம், அசையா சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை, விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், பங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவை தனது வருமானத்திற்கான ஆதாரங்களாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

* அமித்ஷா பெயரில் ரூ.20.34 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. இதில் ரூ.15.77 கோடி சொத்துகள் பரம்பரை சொத்து. பரம்பரை சொத்தில் 770 கிராம் தங்கம், 7 கேரட் வைர நகைகள், 25 கிலோ வெள்ளி அடங்கும். அமித்ஷா சுயமாக சம்பாதித்து வாங்கியிருப்பது 160 கிராம் தங்க நகை மட்டுமே.

* அமித்ஷாவின் மனைவி பெயரில் ரூ.22.46 கோடி அசையும் சொத்துகள் உள்ளன. இதில் 1,620 கிராம் தங்க நகை, 63 கேரட் வைர நகை அடங்கும்.

* அமித்ஷா பெயரில் அசையா சொத்து ரூ.16.32 கோடிக்கு உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.6.55 கோடி அசையா சொத்து உள்ளது.

* அமித்ஷாவுக்கு ரூ.15.77 லட்சம் கடன் உள்ளது. அவரது மனைவிக்கு ரூ.26.33 லட்சம் கடன் உள்ளது.

* அமித்ஷாவுக்கு சொந்தமாக கார் உட்பட எந்த ஒரு வாகனமும் இல்லை. அவர் மீது 3 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
இவ்வாறு பிரமாண பத்திரத்தில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். பாஜ கட்சியில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக நம்பர்-2 தலைவராக உச்ச அதிகாரம் பெற்றவராக அமித்ஷா இருந்து வருகிறார்.

30 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பாஜ கட்சியின் தேசிய தலைவராகவும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது மகன் ஜெய்ஷா, உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சொந்தமாக கார் கூட இல்லை அமித் ஷாவுக்கு ரூ.16 லட்சம் கடன்: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Gandhinagar ,Union Home Minister ,Gujarat Gandhinagar ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!