புதுச்சேரி: ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாக்களித்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனக்கு பிடித்தமான பைக்கில் சென்று திலாசுபேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் சட்டத்தை பின்பற்றி வழிகாட்டியாக இருக்க வேண்டிய முதல்வரே ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சென்று ஓட்டு போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாக்களித்த பின் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுவை மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. ஒன்றியத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அமைச்சர் நமச்சிவாயம் வெற்றிபெறுவது உறுதி. ஒன்றியத்தில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்று தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்றார்.
The post ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.