- மத்திய அமைச்சர்
- மஜி தலைவர்
- மஜி ஆளுநர்
- அருணாச்சல
- சிக்கிம்
- சட்டசபை
- தேர்தல்
- இயக்கி
- புது தில்லி
- சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அருணாச்சல பிரதேசம்
- Maji
- 2
- 1
- தின மலர்
* அருணாச்சல், சிக்கிமில் பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு
புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 102 தொகுதிகளில் மற்றும் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் சட்டப் பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடங்கியது. இந்த தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்? என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் நாளான இன்று காலை 7 மணிக்கு, தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டு மீண்டும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 73 பொதுத் தொகுதிகள், 18 எஸ்சி தொகுதிகள், 11 எஸ்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். முதற்கட்டத் தேர்தலில் ஆயிரத்து 625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களத்தில் உள்ளனர். குறிப்பாக ஒன்றிய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, சர்பனாதா சோனோவால், சஞ்சீவ் பலியன், ஜிதேந்திர சிங், பூபேந்திர யாதவ், அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர்கள் நபம் துகி (அருணாச்சல்), பிப்லப் குமார் தேப் (திரிபுரா) ஆகியோர் அடங்குவர்.
இந்த தேர்தலின் மூலம் அவர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும், சில மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்த வேட்பாளர்களில் 1,491 பேர் ஆண்கள், 134 பேர் பெண்கள் போட்டியிடுகின்றனர். மேற்கண்ட மக்களவை தேர்தலுடன் சிக்கிமில் 32 தொகுதிகளுக்கும், அருணாச்சல் பிரதேசத்தில் 50 தொகுதிகளுக்கும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 18 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்துக்குச் செல்வதற்காகவும், தேர்தல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காகவும் 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள், ஒரு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
24 மணி நேரமும் கண்காணிப்பதற்கு 4,627 பறக்கும் படைகளும், 5208 நிலைக்கண்காணிப்புக் குழுக்களும், 2028 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும், 1255 வீடியோ பார்வையிடல் குழுக்களும் செயல்பட்டன. சட்டவிரோதமாக மதுபானங்கள், போதைப்பொருள்கள், பணம், இலவசப் பொருட்கள், கொண்டுவரப்படாமல் கண்காணிப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே 1,374 சோதனைச் சாவடிகளும், சர்வதேச எல்லையில் 162 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று பதிவான வாக்குகள், அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. வரும் 26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை மீதமுள்ள 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றைய தினமே ஒன்றியத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்றும், 4 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்பதும் தெரிந்துவிடும்.
வாக்குச்சாவடியில் வீரர் மர்ம மரணம்
மேற்குவங்க மாநிலம் மாதபங்காவில் உள்ள வாக்குச்சாவடியின் குளியலறையில், இன்று காலை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. குளியலறையில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தும் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூர் முகாமில் ஓட்டுச்சாவடி
கடந்த சில மாதங்களால் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் வெளிப்புறப் பகுதிகள் உட்பட, மோதல் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் வாக்களிக்க வசதியாக, சிறப்பு வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கு முகாம்களில் தங்கியிருந்தவர்கள் வாக்களித்தனர். அதேநேரம் நாகலாந்தின் கிழக்கு பகுதியில், குறிப்பிட்ட பிரிவினர் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்த நிலையில் அங்கும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி அழைப்பு
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்து புதிய சாதனை செய்ய வேண்டும்.குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது மற்றும் ஒவ்வொரின் குரலும் முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த பேட்டியில், ‘முதற்கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். உங்களை வாக்குச்சாவடி மையங்கள் வரவேற்கின்றன. முதல் கட்டமாக நடக்கும் இன்றைய தேர்தலில் 16 கோடி வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ‘இது உங்கள் வாக்குச் சாவடி’ என்ற பெயரில் உங்களுக்கான அழைப்பிதழ் ஆகும். இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
உதம்பூரில் முதல் தேர்தல்
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்ட பின்னர், முதன் முறையாக அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. முதன் முறையாக உதம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த தொகுதியில் 16.23 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி வருகின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2,637 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வாக்குப்பதிவை பதிவு செய்து வருகின்றனர். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த ெதாகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 10 பாஜக வேட்பாளர்கள்
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அம்மாநில முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் இன்று நடக்கும் தேர்தலில், 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளது. இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதிக்கு பதிலாக ஜுன் 2ம் தேதி எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அன்பின் கடையை திறங்கள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு! உங்களின் ஒவ்வொரு வாக்கும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், எதிர்கால சந்ததியினரையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, கடந்த 10 ஆண்டாக நாட்டின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீள்வதற்கு, உங்கள் வாக்கு என்ற மையின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பைத் தோற்கடித்து, ஒவ்வொரு மூலையிலும் அன்பின் கடைகளை திறங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
4ம் கட்ட வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று (ஏப். 19) முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. ஆந்திர பிரதேசம் (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்கம் (8) ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் (1) உள்ள 96 தொகுதிகள் நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. நான்காம் கட்டத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேலும் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது.
அதிகாரிகள் கெடுபிடி
உத்தரபிரதேச மாநிலம் கைரானா மக்களவைத் தொகுதியில் உள்ள கைரானா நகர் இஸ்லாமியா இன்டர் கல்லூரியில் வாக்குப்பதிவு மந்தமாக நடப்பதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால், பெண்கள் பகுதியில் வாக்குப்பதிவின் வேகம் குறைந்துள்ளதாகவும், வாக்குப்பதிவு தாமதத்தை தவிர்க்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சர்வாதிகார ஆட்சியை அகற்ற வேண்டும்
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த முறை நாட்டின் சர்வாதிகார ஆட்சியை அகற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசியலமைப்புக்கு எதிரான ஆட்சியையும் தோற்கடிக்க வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இப்போது உங்கள் வாக்கில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் துளிகள்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வாக்களித்தார். இந்த தொகுதியில்பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சருமான நிதின் கட்கரி போட்டியிடுகிறார். நாடு முழுவதும் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், 48 தொகுதிகளில் காங்கிரஸ் – பாஜக கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தனர். மேற்குவங்க மாநிலம் கூச்பெஹார் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் அனந்த் பர்மன் என்பவர், பாஜகவினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
The post 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்? appeared first on Dinakaran.