×

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் மற்றும் நாட்டிற்கு என பாரம்பரிய உடை, உணவு, கலை, விளையாட்டு என பல உண்டு. அதில் நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு சிலம்பம், அடிமுறை என்றால், கேரளா என்றதும் களரிதான் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட களரி தற்காப்புக் கலையினை அம்மாநில மக்கள் மட்டுமில்லாமல் பலரும் பயின்று வருகிறார்கள். இந்தக் கலை நம் மூவேந்தர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அவர்கள் அனைவரும் இந்தக் கலையினை மற்ற போர்க்கலைகளில் ஒன்றாக கற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இந்தக் கலை போர்களிலும் முக்கிய பங்கு வகித்து வந்தது.

சில சமயம் நாட்டு மக்களுக்கு இடையே போட்டிற்காகவும் இந்தக் கலையினை பயன்படுத்தி வந்தனர். அப்படிப்பட்ட சிறப்பு கொண்ட இந்தக் கலையை தற்போது ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்தின் பேரில் கற்றுக்கொள்ள முன் வருகிறார்கள். அப்படியே பயின்றாலும், இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதில்லை. இவர்களுக்கு மத்தியில், தன்னுடைய பள்ளி காலம் தொடக்கத்தில் கற்றுக்கொண்ட இந்த களரி மற்றும் சிலம்பக் கலையினை தான் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் ‘Neo kalari’ எனும் பெயரில் மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த லாவண்யா மற்றும் கிளாட்சன் தம்பதியினர்.

‘‘25 வருடங்களுக்கு மேலாக நான் களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்தக் கலைக்கு பல பெயர்கள் உள்ளன. அதாவது, ஒவ்வொரு ஊரிலும் அதன் பெயர், அதில் பயன்படுத்தப்படும் நுணுக்கங்கள் அனைத்தும் வேறுபடும். அதற்காக முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்றில்லை. சின்னச் சின்ன மாற்றங்கள்தான் செய்யப்பட்டு இருக்கும்’’ என்று பேச ஆரம்பித்தார் லாவண்யா.  ‘‘களரி, சிலம்பம் இரண்டும் என்னுடைய முதல் விருப்பமாக இருக்கவில்லை.

எனக்கும் என் சகோதரிக்கும் பரதக்கலை மேல்தான் ஆரம்பத்தில் ஆர்வம் இருந்தது. அதனால் நாங்க பரத நாட்டியம்தான் முதலில் பயின்றோம். பிறகு எப்படி களரி மேல் விருப்பம் ஏற்பட்டது என்ற கேள்வி உங்களுக்கு எழும். பொதுவாக நாம் ஒரு கலையினை பயிலும் போது, அதற்கு இணையாக, வேறு ஒரு கலையை கற்றுக்கொள்வோம். உதாரணத்துக்கு, வெளிநாடுகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ball dance கற்றுக்கொள்பவர்கள், அதற்கு ஏற்றது போல் ஜிம்னாஸ்டிக்கும் சேர்த்து பயில்வார்கள்.

காரணம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி அவர்கள் நடனத்திற்கு மிகவும் உதவும். ஜிம்னாஸ்டிக்கில் உள்ள சின்னச் சின்ன நுணுக்கங்கள் அவர்களின் நடனத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பயிற்சியாளர்களே அதை பயிலச் சொல்லி ஊக்குவிப்பார்கள். அப்படித்தான் நான் பரதத்துடன் சேர்த்து களரியும் கற்றுக் கொண்டேன். இந்தக் கலையை களரி பயட்டு என்று சொல்வார்கள். களரி என்பது கலையின் பெயர்.

பயட்டு என்றால் அந்தக் கலை கற்பிக்கப்படும் பயிற்சிக் கூடம். களரி கேரளாவையும், சிலம்பம் நம் ஆதி தமிழ்நாட்டையும் சார்ந்தது என்பது நமக்கு தெரியும். அதே போல் களரியை குறித்தும் நம்முடைய புராணக் கதைகளிலும் சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு பழமை வாய்ந்த தற்காப்புக்கலை. 12ம் நூற்றாண்டுகளில் இருந்து களரி பயட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இந்தக் கலையை பரசுராமர்தான் தோற்றுவித்தார் எனவும் புராணங்களில் இடம் பெற்றுள்ளது’’ என்றவர் இதன் வகைகளைப் பற்றி விளக்கினார்.

‘‘களரி பயட்டில் பல வகைகள் உண்டு. மெய்பயட்டு, உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் தாவுதல், காலை உயர்த்துதல், உதைப்பது, பாய்தல் அடங்கும். கோல்தாரி, மர ஆயுதங்களை கொண்டு செய்யப்படும் பயிற்சி. அங்கதாரி, உலோகங்களால் ஆன வாள், கத்தி, சுருள்வாள் மற்றும் இழுவைகளை பயன்படுத்துவது மற்றும் வெறும் கைகளை கொண்டு மேற்கொள்ளும் பயிற்சி என 4 வகைகள் உண்டு. களரி கற்பதால் ஒருவரால், எந்தவொரு சூழ்நிலையினையும் கடந்து தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும். ஒரு பிரச்னையை எதிர்கொண்டு அதனை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம், சகிப்புத்தன்மை போன்றவற்றையும் கற்றுக்கொள்ளலாம்.

இதில் ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம், விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய திறன் அதிகரிக்கும். பயம் நீங்கும். களரிபோல் சிலம்பமும் நமக்கு மிகவும் பரிச்சயமான கலை. இதனை பலர் போட்டிக்காக கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இதன் உண்மையான பரிமாணம் தற்காப்பு. ஒரு இடத்தில் பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அதில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை இந்தக் கலைகள் சொல்லித் தரும். இதனை கற்றுக் கொள்ளும் போது நம்முடைய உடல் மொழி மட்டுமில்லாமல் நம் எதிராளியின் உடல் மொழியினையும் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு புரிந்துகொள்ளும் போது, பிரச்னையால் ஏற்படும் சண்டையில் இருந்து எளிதாக தப்பித்துக் கொள்ள முடியும். இவை தற்காப்பிற்காகவே தவிர சண்டைக்கானது இல்லை.

இந்தக் கலைகளை கற்பதன் மூலம் மேலும் சில நன்மைகளும் உண்டு. தற்போது இளம் தலைமுறையினர், கை கால், மூட்டு வலி என்று இளம் வயதில் அவதிப்படுகிறார்கள். இந்தக் கலையினை கற்பவர்களுக்கு வயதானாலும் இது போன்ற பிரச்னைகள் பெரியதாக இருக்காது. கற்கும் போது, ஒரு நபர் கீழே விழ முற்பட்டால், அவ்வாறு விழாமல் எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை இந்தக் கலை கற்றுத்தரும். களரி பயட்டு எங்களுடைய முழுநேர வேலை கிடையாது.

நான் ஒரு ஆர்கிடெக்ட், தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கிறார். திருமணத்திற்கு முன்பே பரதம், களரி, சிலம்பம் கற்றுக் கொண்டேன். அதற்கு என் பெற்றோர்கள் முழு ஆதரவு கொடுத்தாங்க. திருமணத்திற்கு பிறகு அதே ஆதரவு என் கணவர் எனக்கு கொடுக்கிறார். அவரும் களரி பயின்றுள்ளார். வார இறுதியில் விடியற்காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும்தான் நாங்க பயிற்சி அளிக்கிறோம்.

இந்தக் கலையை சொல்லிக் கொடுக்க முக்கிய காரணம் எல்லோருடைய மனதிலும் ஒருவித பயம் இருக்கும். அதிலிருந்து எவ்வாறு ெவளிவருவது மற்றும் நம்முடைய பாரம்பரியக் கலையினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்க பயிற்சி அளிக்கிறோம். தற்போது 50க்கும் மேற்பட்ட மாணவ/ மாணவிகள் களரி மற்றும் சிலம்பம் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள் அவர்களுக்கு அடிப்படையில் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம்’’ என்றவர் பரதம் பயின்றிருந்தாலும், அதற்கான பயிற்சி அளிக்காமல் களரிக்கு மட்டும் பயிற்சி அளிப்பது குறித்து விவரித்தார்.

‘‘சென்னை மட்டுமில்லை தமிழகம் முழுதும் பரதக் கலையை சொல்லிக் கொடுக்க பல பயிற்சிக்கூடங்கள் உள்ளன. சபாக்களிலும் இதற்கென தனிப்பட்ட பயிற்சி அளிக்கிறாங்க. ஆனால் தற்காப்புக்கலைகளுக்கு அப்படி இல்லை. அதிலும் குறிப்பாக களரி, சிலம்பம் மற்றும் அடிமுறை போன்ற கலைகளுக்கு பெரிய அளவில் பயிற்சிக்கூடங்கள் இல்லை.

அதனால்தான் நாங்க களரி மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். அதற்காக நாட்டியத்தை நான் விடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அதற்கான பயிற்சியும் நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தக் கலைகள் பற்றி மக்களுக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் தான் அதை விரும்பி கற்கிறார்கள். அதே சமயம் நம்முடைய பாரம்பரியக் கலையினை வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் விரும்பி கற்றுக் கொள்ளும் இந்தக் கலை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். மேலும் பலர் இதனை பயில ஊக்குவிக்க வேண்டும்’’ என்றார் லாவண்யா.

The post தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு appeared first on Dinakaran.

Tags : Kalari ,Tamils ,Silambam ,Kerala ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!