×

மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செங்கோல் தருவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை கோச்சடையைச் சேர்ந்த தினகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் 8ம் நாளில் நடக்கும் பட்டாபிஷேக நிகழ்வின்போது மீனாட்சி அம்மனிடம் செங்கோல் வழங்கும் வைபவம் நடைபெறும். இச்செங்கோலை அறங்காவலர் குழுத்தலைவர் பெற்றுக்கொள்வார்.ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது.

தற்போதைய அறங்காவலர் குழுத்தலைவரான ருக்மணி பழனிவேல்ராஜன், கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது. தகுதியான வேறு நபரிடம் செங்கோலை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழா பட்டாபிஷேக நிகழ்வின்போது செங்கோல் வழங்குவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, நவீன காலத்திலும் பிற்போக்குத்தனமாக வழக்கு தொடர்வதா? கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்குள்ளது என கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கு கிளையின் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது,மனுதாரர் தரப்பில்,”கோயிலின் நிகழ்வுகளில் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். சீதலக்குறிப்பேடு சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,”அக்காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது. நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. ஆகம விதிகள் விவகாரத்தில் ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல.ஆகம விதிகள் என்ன? வேறு ஏதேனும் குறிப்பு உள்ளதா? என்பவை குறித்து ஒரே இரவில் முடிவுக்கு வர இயலாது. இந்த வருடம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. முறையான ஆதாரங்கள் தாக்கல் செய்யுங்கள், அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம். இந்த ஆண்டு எப்போதும் போல நடத்தலாம்,” என உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்

The post மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Madurai Temple ,Madurai ,Icourt branch ,Madurai Meenakiyamman Temple ,Dinakaran ,Kochadaya ,Icourt Madurai ,Madurai Chitra Festival ,Sengol ,
× RELATED வெளிநாட்டு மருத்துவம் படித்தோருக்கான...