×
Saravana Stores

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திமுக வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை – மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,MINISTER ,MU K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Dimuka ,K. Stalin ,Chief Minister MLA. K. ,Stalin ,Dinakaran ,
× RELATED உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த...