அகமதாபாத்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிய குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்னில் சுருண்டது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். விரித்திமான் சாஹா, கேப்டன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். கில் 8 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் பிரித்வி ஷா வசம் பிடிபட்டார். சாஹா 2 ரன் எடுத்து முகேஷ் குமார் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார்.
சாய் சுதர்சன் 12 ரன் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, குஜராத் 4.1 ஓவரில் 28 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. அதிரடி வீரர் டேவிட் மில்லர் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, 5 ஓவர் முடிவில் 30/4 என மேலும் சரிவை சந்தித்தது. அபினவ் மனோகர் 8 ரன்னில் வெளியேற, ஷாருக் கான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். குஜராத் 8.4 ஓவரில் 48 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திக்கு தெரியாமல் விழி பிதுங்கியது.
ராகுல் திவாதியா 10, மோகித் ஷர்மா 4 ரன் எடுத்து அணிவகுப்பை தொடர்ந்தனர். சக வீரர்கள் சொதப்பினாலும், ரஷித் கான் தனி ஒருவனாகப் போராடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். ரஷித் 31 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி முகேஷ் குமார் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். நூர் அகமது 1 ரன் எடுத்து முகேஷ் வேகத்தில் கிளீன் போல்டாக, குஜராத் டைட்டன்ஸ் 17.3 ஓவரில் 89 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சில் முகேஷ் குமார் 3, இஷாந்த் ஷர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2, கலீல் அகமது, அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.
The post கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில் குஜராத் டைட்டன்ஸ் திணறல்: 89 ரன்னில் சுருண்டது appeared first on Dinakaran.