×

ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

லக்னோ: அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் காசியாபாத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது; பாஜக செல்வாக்கு சரிந்து வருகிறது. அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது. காங்கிரசும் இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சி செய்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும்.

வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகும். பணவீக்க விகிதம் நாட்டின் 2-வது முக்கிய பிரச்சனை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்க விகிதம் போன்ற பிரச்சனைகள் குறித்து பிரதமரோ, பா.ஜ.க.வினரோ வாய் திறப்பதே இல்லை. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு குறித்தெல்லாம் பாஜகவுக்கு கவலை இல்லை. விசாரணை அமைப்புகள் மூலம் பல நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க. கொள்ளை அடித்துள்ளது. பாஜக ஊழல்வாதிகளை மட்டும் வைத்துக் கொள்ளவில்லை; ஊழல் பணத்தையும் வைத்துள்ளது.

மக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமரோ, பாஜகவோ பேசவில்லை. இந்த தேர்தலில் பா.ஜ.க. 150 இடங்களில்தான் வெற்றி பெறும் என்று அக்கட்சியினரே கூறுகின்றனர். 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது. பிரதமர் மோடி ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி தோல்வியடைந்துவிட்டது. பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்; ஆகாயத்தில் பறந்தார்; இரண்டுக்கும் இடையே உள்ள மக்களை மறந்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் தலைவர் என்று கூறினார்.

அகிலேஷ் யாதவ் பேசுகையில்; உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. பாஜக ஆட்சியில் விவசாயிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பத்திரம் பாஜகவின் மிகப்பெரிய ஊழல். உத்தரபிரதேசத்தில் பாஜகவின் டபுள் எஞ்சின் வேலை செய்யவில்லை, பாஜக சொல்வதெல்லாம் பொய். பாஜக ஆட்சியில் போட்டித் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிவு ஒரு முறை அல்ல பல முறை நடந்துள்ளது. போட்டித் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிவு காரணமாக பல லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று புதிய ஆட்சியை அமைக்கும் என்று கூறினார்.

 

The post ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : J. K. ,Rahul Gandhi ,Lucknow ,R. S. S. Rahul Gandhi ,Akhilesh Yadav ,Ghaziabad ,BJP ,J. ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...