புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.19) நடைபெறுகிறது. இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு, பாகூர், காமராஜர் நகர், திருபுவனை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏம்பலம், மணவெளி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பணம் தருகிறார். கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கு பாஜகவினர் ஓட்டுக்கு ரூ.500 கொடுப்பதாக புகார் கூறியுள்ளார். பணம் கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் உள்ளது. புதுச்சேரியில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. பாஜகவினர் பணம் கொடுத்த வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன் என தமிழ்வேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
The post பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.