×

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய எரிசக்தி படகு சர்வதேச போட்டியில் பங்கேற்கிறது

 

கோவை, ஏப். 17: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் குழுவினர் தயாரித்துள்ள எரிசக்தி படகு சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளது. இது குறித்து மாணவர்கள் சீ சக்தி குழுவின் செயல்பாட்டு தலைவர் மாணவி ஹேமலதா, பைலட் யுக பாரதி, கல்லூரி முதல்வர் எழிலரசி, மாணவர்கள் ரோஷன் மனோஜ், கிரிதேஷ் சுதாகர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்துறையினரை யாட்டிங் என ஒரு வித படகு துறையில் சுத்தமான ஆற்றலை பயன்படுத்தி உந்துசக்தி தொழில்நுட்பத்தை வடிவமைத்து வெற்றிகரமாக பயன்படுத்தி காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் சீ சக்தி என்று பெயரிடப்பட்ட, எங்களின் குழு மொனாக்கோ எனர்ஜி படகு போட்டியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்க உள்ளது. இந்த படகுப்போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் உள்ள 21 அணிகள் பங்கேற்கிறது.

இதற்காக எங்கள் குழுவினர் காக்பிட் மற்றும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி மிகவும் திறமையான மற்றும் நீடித்த உந்துவிசை அமைப்புடன் கூடிய படகு வடிவமைத்து உள்ளோம். இதற்கு யாழி 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படகு 18 நாட்ஸ் வேகத்தில் பயணித்து 25 நாட் வேகத்தை அடையும். கடந்த முறைகளைவிட இப்போது படகின் ஓட்டுநர் அமர்ந்து படகை இயக்கும் இடமான காக்பிட்டின் எடை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தரவரிசையில் 6வது இடத்தைப் பெற்றோம். இந்த முறை வெற்றி பெற பல்வேறு முயற்சி எடுத்து உள்ளோம். படகின் முதற்கட்ட சோதனைகள் கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது. அடுத்து பாண்டிச்சேரியில் நடக்கவுள்ளது. பின்னர், ஜூன் மாத இறுதியில் மொனக்கோ சென்று போட்டியில் பங்கேற்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய எரிசக்தி படகு சர்வதேச போட்டியில் பங்கேற்கிறது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kumaraguru College of Technology ,Saravanampatti ,Student Sea Shakti ,
× RELATED 60 கிலோ குட்கா பதுக்கிய 3 பேர் கைது