நாகப்பட்டினம், ஏப்.17: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றி வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதை தேர்தல் காவல் பார்வையாளர் சரணப்பா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம்வர்கீஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு வேறு நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு வேறு நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளவர்கள் அஞ்சல் மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதன்படி கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை அஞ்சல் மூலம் வாக்குகள் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றும் வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ளவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குகள் செலுத்த வாக்காளர் வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது அஞ்சல் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இதை காவல் தேர்தல் பார்வையாளர் சரணப்பா, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம்வர்கீஸ் ஆகியோர் பார்வையிட்டனர். அதை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே செல்லூரில் அமைந்துள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினையும் தேர்தல் காவல் பார்வையாளர் சரணப்பா, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம்வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். டிஆர்ஓ பேபி, எஸ்பி ஹர்ஷ்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.