×

10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி: தமிழ்நாட்டிற்கு ஒரு புல்லை கூட பிடுங்கி போட்டது இல்லை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுமுடி அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தலில் தமிழகம், புதுவை சேர்த்து 40க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு என்பது மோடிக்கு வைக்கும் வேட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். பாசிச பாஜவை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று நீங்கள் பிரசாரம் செய்தால் பாஜவை நிச்சயம் இந்த தேர்தலில் விரட்டி விடலாம்.

பல திட்டங்கள் தொடர வேண்டுமெனில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறேன். 10 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட மோடி தமிழ்நாட்டிற்கு என ஒரு புல்லை கூட பிடுங்கி போட்டது இல்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.2500 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவிலலை. மோடியை இனிமேல் 29 பைசா மோடி என்று அழையுங்கள். பாஜவினர் யாராவது வந்தால் 29 பைசா எப்படி இருக்கிறார் என்று கேளுங்கள். இந்த முறை 40க்கு 40 வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

மொழி, கல்வி, நிதி உரிமைகளை பாதம் தாங்கி பழனிசாமி அடகு வைத்ததை மீட்க தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ஒன்றியத்தில் வர உள்ள ஆட்சி திராவிட மாடல் அரசா அல்லது 29 பைசா ஆட்சியா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. தற்போது மோடி தமிழகத்தை சுற்றி சுற்றி வருகின்றார். 10 ஆண்டுகளாக வராத மோடி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வருகிறார். ஏமாந்து விடாதீர்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக கூறி ஒற்றை செங்கல்லை மட்டும் நட்டு வைத்திருந்தனர். அந்த செங்கல்லையும் நான் பிடுங்கி வந்துவிட்டேன். தமிழ்நாட்டு மக்களுக்கு சுய மரியாதை வேண்டும்.

நமக்கான உரிமைகள் வேண்டும். மொழி உரிமை வேண்டும். தமிழ் முக்கியம். 4 ஆண்டுகளாக பாஜ கூட்டணியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல மாநில உரிமைகளை பறிக்க காரணமாக இருந்தவர் பழனிசாமி. மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமை போன்ற உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டார். மோடிக்கு அடிமையாக இருந்து ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் இருந்தால் நமக்கு வர வேண்டிய ஓட்டும் வாரது என்று வெளியேறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். தேர்தல் முடிந்ததும் இருவரும் சேர்ந்துவிடுவார்கள். மோடியை பார்த்து மூச்சு கூட விடமாட்டார் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய அரசு கொடுக்கும் 29 பைசாவை வைத்துக்கொண்டு இவ்வளவு திட்டங்களை செய்யும் நம் முதல்வர், நாளை தமிழ்நாட்டு மக்களை மதிக்க கூடிய நல்ல பிரதமர் வந்தால் எத்தனை நல்ல திட்டங்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்து பாருங்கள். எனவே, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி: தமிழ்நாட்டிற்கு ஒரு புல்லை கூட பிடுங்கி போட்டது இல்லை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin Kattam ,DMK ,Youth Secretary ,Udhayanidhi Stalin ,Erode ,KE Prakash ,Othakadai ,Kodumudi ,Pudu ,Udhayanidhi Stalin Gattam ,
× RELATED தமிழகத்திற்கு 7 முறை வந்த பிரதமர் மோடி!...