×

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடக்கம்: 20ம் தேதி திருக்கல்யாணம், 22ம் தேதி தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி திருக்கல்யாணமும், 22ம் தேதி தேரோட்டமும் நடக்கவுள்ளன. காஞ்சிபுரத்தில், பெருமாள் ஆமை வடிவில் சிவனை வழிப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், சித்திரை திருவிழா கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது.

பின்னர், 2020ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இக்கோயிலில் சித்திரை திருவிழா நடத்தப்படாததால், கடந்த 2021ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக இந்த கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. தற்போது, கோயில் திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1ம்தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை திருவிழா நேற்று (நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கி, மே மாதம் 3ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளனர்.

மேலும், வரும் 20ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 22ம் தேதி தேரோட்டமும், 24ம்தேதி கோயில் வரலாற்றை விளக்கும் முருக்கடி சேவை நிகழ்வும், 25ம் தேதி வெள்ளி தேரோட்டமும், 27ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன. இதனைத்தொடர்ந்து, மே மாதம் 3ம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், காஞ்சிபுரம் மாநகர செங்குந்த மகாஜன சங்க தலைவர் எம்.சிவகுரு, சுப்பராயன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடக்கம்: 20ம் தேதி திருக்கல்யாணம், 22ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chitrai festival ,Kanchipuram Kachabeswarar temple ,Thirukalyanam ,Chariot procession ,Kanchipuram ,Lord ,Shiva ,hoisting ,20th ,
× RELATED கோவில்பட்டி அருகே கோவில்...