×

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவின் நிறைவு நாளையொட்டி நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றன. 9ம் திருநாளான சனிக்கிழமை தேர் திருவிழாவும், 10ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி தீபாராதனையும் நடைபெற்றது. 11ம் திருநாளான நேற்று திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் நகராட்சி சேர்மன் கருணாநிதி, அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்தியலட்சுமி ரவீந்திரன், கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா, பொதுப்பணித்துறை அதிகாரி மாரீஸ்வரன் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பூஜைகளை ரகு பட்டர், செண்பகராம பட்டர், ராகவன் பட்டர் ஆகியோர் செய்து இருந்தனர். கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், சுகாதேவி, திருமுருகன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Theppath Festival ,Kovilpatti Senpagavalli Amman Temple ,Swami Darshan ,Kovilpatti ,Koilpatti Senpakavalli ,Amman ,Udanurai ,Sri Bhuvananathaswamy Temple ,Panguni Perundruvizha ,Koilpatti Senpakavalli Amman Udanurai Sri Bhuvananathaswamy Temple ,Koilpatti Senpakavalli Amman Temple ,of Devotees ,Swami ,Darshan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...