கோவை: தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தொகுதிகளுக்கு திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.கோவை ரைசிங்’ என்ற தலைப்பில் கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கோவையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று அமைச்சர் கூறியுள்ளார். கோவைக்கு புதிய உதயத்தை கொடுக்க திமுக வாக்குறுதிகள் அளித்துள்ளது.
சிங்கார சென்னை போல கோவை ரைசிங் திட்டம் அமையும். சாலை போக்குவரத்து, ரயில்வே போக்குவரத்து, விமான சேவை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபடும். நீர் மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் விரைந்து முடிக்கப்படும். கோவையில் பம்பு செட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சந்திக்கும் ஜி.எஸ்.டி. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பிரத்யேக தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். அவினாசி சாலை, உக்கடத்தில் மேம்பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
கோவை நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் அமைப்பது விரைவுப்படுத்தப்பட்டு சிறந்த உட்கட்டமைப்பு உருவாக்கப்படும். சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் – கோபிச்செட்டிபாளையம் ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
The post கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.