×
Saravana Stores

இந்த போட்டியில் சில அற்புதமான காட்சிகளை காண முடிந்தது: கேப்டன் பாட் கம்மின்ஸ் நெகிழ்ச்சி

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூரில் நேற்று நடந்த 30வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்-ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் விளாசியது. அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், கிளாசன் 67 ரன்களும், அப்துல் சமாத் 37 ரன்களும் விளாசினர். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன், டூ பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன், விராட் கோஹ்லி 20 பந்துகளில் 42 ரன்களும் சேர்த்தனர். 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 102 ரன் விளாசிய சன்ரைசர்ஸ் வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலமாக சன்ரைசர்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “இந்த போட்டியில் நான் பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.

நிச்சயம் இன்று அற்புதமான சில காட்சிகளையும் காண முடிந்தது. இதுபோன்ற போட்டிகள் கூடுதல் உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் ஒரு ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களை விட்டுக் கொடுத்தால் கூட மிகப்பெரிய இம்பேக்ட் கொடுக்க முடியும். இந்த போட்டியில் பிட்சை கண்டறியும் முயற்சியை பாதியோடு கைவிட்டுவிட்டேன். சின்னச்சாமி மைதானம் தார் ரோட்டை போல் மாறிவிட்டது. இந்த சீசனில் எங்களின் 4வது வெற்றி இது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வெளியேறியுள்ளனர்’’ என்றார். இந்த போட்டியில் டாஸின் போது `சின்னச்சாமி மைதானத்தில் 240 ரன்கள் அடித்தால் கூட அது சராசரி ஸ்கோர்தான்’’ என்று கம்மின்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 4 ஓவர் வீசி 45 ரன்களுக்கு கீழ் ரன்களை விட்டுக் கொடுத்த ஒரே பவுலர் பாட் கம்மின்ஸ் தான். அதோடு அவர், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தோல்வி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளசிஸ் கூறுகையில், “எங்களது பேட்டிங் நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இது டி20க்கு ஏற்ற வகையிலான ஆடுகளம் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் சன்ரைசர்ஸ் நிர்ணயித்த இலக்கு அருகே வரவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் 288 என்பது மிகப்பெரிய இலக்கு. இது உண்மையிலேயே கடுமையாக இருக்கிறது.

நாங்கள் இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்தோம். எங்கள் நம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கிறது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள், இந்த ஆடுகளத்தில் பந்து வீச கடுமையாக தடுமாறுகிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரையிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ரன் ரேட் எப்போதும் சரிவடையாமல் பார்க்க வேண்டும். பவர்பிளே முடிந்த உடன் எங்களுடைய ரன் ரேட் கொஞ்சம் சரிகிறது. அதனை சரி செய்ய வேண்டும். பேட்ஸ்மேன்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் அணி வீரர்கள் 30, 40 ரன்கள் கூடுதலாக பந்துவீச்சில் கொடுத்துவிட்டார்கள். அது உண்மையிலேயே தோல்விக்கு ஒரு காரணமாக மாறிவிட்டது. இந்த தோல்வியால் மனது பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் மனதால் விளையாடக்கூடிய விளையாட்டு. சில சமயம் இதுபோன்ற போட்டிகளில் விளையாடும் போது நமது தலையே வெடித்துவிடும் போல் இருக்கும். தற்போது நாங்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றோம்’’ என்றார்.

The post இந்த போட்டியில் சில அற்புதமான காட்சிகளை காண முடிந்தது: கேப்டன் பாட் கம்மின்ஸ் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Captain Pat Cummins' ,Bengaluru ,Sunrisers ,RCB ,IPL T20 ,Travis ,Captain Pat Cummins ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...