×

ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர் பகுதியில் உள்ளூர் மக்கள் தினமும் கந்தர்பாலிலிருந்து பட்வாரா வரை படகுகளில் தங்களின் அன்றாட பணிக்காக சென்று வருவது வழக்கம். இவ்வாறு இன்று காலை படகில் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் படகில் பயணம் செய்துள்ளனர்.

ஸ்ரீநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஜீலம் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் படகு ஜீலம் ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இதில் படகில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

படகில் 12க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 18 வயதுடைய 2 பெண்கள் உட்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கிஷ்த்வாரி பதேரில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்படுவதாகவும், அப்பகுதியில் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.

The post ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Jelam river ,Srinagar ,Jammu and Kashmir ,Jeelam River ,Kandarpal ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை