சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்று ஏப்ரல் 17ம் தேதி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என்று விதி உள்ளது. மக்களவை தேர்தலை ஒட்டி “இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற தலைப்பில், திமுக சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது எனக்கூறி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திமுக விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் ஆறு நாட்கள் வரை கால தாமதம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து, விளம்பரங்களை அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக விதிமுறைகளை வகுத்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வீடியோ விளம்பரங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக கூறி, விளம்பரத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்து மாநில அளவிலான குழுக்களின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகள் 2004ம் ஆண்டு தேர்தல் வரை தான் அமலில் இருந்தது. இந்த விதிகளின் மூலம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்று விளக்கமளித்தார்.
அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், விதிமுறைகளை எதிர்க்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில்தான் தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2023ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து 10 மாதங்களுக்கு பிறகே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்ற விதி முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை 17ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தனர்.
The post விளம்பரத்தில் குறிப்பிட்ட பகுதிகளை நீக்குவதாக குற்றச்சாட்டு; தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு எதிர்த்து திமுக வழக்கு: ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.