×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சிறை தண்டனை நிறுத்திவைக்க மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு: காவல்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை வகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது மனுதாரருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டில் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும்? எனவும் வாதிட்டார்.

இதனையடுத்து, நீதிபதி, முதலில் சரணடைந்து விட்டு பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அது குறித்து பரிசீலிக்கலாம். சாதாரண மனிதன், குண்டுமணியை திருடினால் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு 90 நாட்கள் கழித்து தான் ஜாமீன் கிடைக்கிறது.

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?. தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? அந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ராஜேஷ் தாஸ்க்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனு மீது காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை புதன் கிழமைக்கு தள்ளிவைத்தார்.

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சிறை தண்டனை நிறுத்திவைக்க மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு: காவல்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajeshdas ,Chennai ,Rajesh Das ,Villupuram Criminal Arbitration Court ,Villupuram Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...