×

நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: கோத்தகிரியில் பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேச்சு

 

ஊட்டி, ஏப். 16: நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்கு பாஜ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கோத்தகிரியில் தேர்தல் பிரசாரத்தில் பாஜ வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்தார். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதையடுத்து நீலகிரி தொகுதியில் பொதுமக்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் மேற்கொண்டு பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேசியதாவது:

நீலகிரி பகுதியில் வசிக்கும் 1 லட்சம் பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்கு வீடு கட்ட, ஜார்க்கண்டில் இருந்து பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டு விழா செய்யப்பட்டது. இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மண் பரிசோதனை திட்டம் மூலம் இங்கு பல விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

அதோடு, பயிர் கடன், மானியத்துடன் கூடிய பயிர் கடன் என விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகள் கடன் பிரச்சனைகளில் இருந்து மீளவும் இதுபோன்ற பல திட்டங்களை பிரதமர் கொண்டு வந்திருக்கிறார். தேயிலை விலைக்கான நிரந்திர பாஜவால் மட்டும்தான் முடியும். எனது அப்பாவுக்கு 70 வயது. அம்மாவுக்கு 68 வயது. இன்னமும் விவசாயம்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள விவசாயிகளின் ஒவ்வொரு கஷ்டமும் என்ன என்பது எனக்கு தெரியும்.

அதனால், இங்குள்ள தேயிலை விவசாயிகளின் துயர் நிச்சயம் துடைக்கப்படும். அனைவருக்கும் வீடு, குடி நீர் இணைப்பு, காஸ் இணைப்பு என எண்ணற்ற திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிறைய விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இங்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைத்து தரப்படும். பிரதமர் வந்த பிறகுதான் ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற விளையாட்டுகளிலும் பதக்கங்கள் வென்றோம். இவ்வாறு பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேசினார்.

முன்னதாக நேற்று காலை நீலகிரி மாவட்டத்திற்கு என்று தனி தேர்தல் அறிக்கையை ஊட்டியில் உள்ள முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்திற்கு இன்று தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளதுபோல் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அனைத்து வாக்குறுதிகளும் கட்டாயம் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

The post நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: கோத்தகிரியில் பாஜ வேட்பாளர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,BJP ,L. Murugan ,Kotagiri ,Ooty ,BJP government ,Nilgiri ,Nilgiri Parliamentary ,Dinakaran ,
× RELATED மகளிர் சுய உதவிக்குழுவுக்கு...