* ஏடிபி மான்டி-கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். பைனலில் சிட்சிபாசிடம் போராடி தோற்ற நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 4 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், முதல் 6 இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய 6 இடங்களை பிடித்த நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி, பஞ்சாப் எப்சி, ஈஸ்ட் பெங்கால் எப்சி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் எப்சி அணிகள் வெளியேறின. ஐதராபாத் அணி 22 லீக் ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது (5 டிரா, 16 தோல்வி). அந்த அணி மொத்தம் 10 கோல் அடிக்க, எதிரணிகள் 43 கோல் போட்டன.
* ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் (54), ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். குயின்ஸ்லாந்து கடற்கரையில் ‘சட்டத்துக்கு புறம்பாக பின் தொடருதல், உள்நோக்கத்துடன் வீடுகளுக்குள் புகுதல், தீங்கு விளைவிக்கும் நோக்கில் தாக்குதல், குடும்ப வன்முறை’ என 5-12-2023 முதல் 12-04-2024 வரை மொத்தம் 19 குற்றச்சாட்டுகளின் கீழ் ஸ்லேட்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட ஸ்லேட்டர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
* இங்கிலாந்து அணி முன்னாள் சுழல் நட்சத்திரம் டெரக் அண்டர்வுட் (78 வயது) நேற்று காலமானார். 1966 – 1982 வரை மொத்தம் 86 டெஸ்டில் விளையாடி உள்ள அண்டர்வுட் 297 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
* மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்காக விளையாட டிராவிஸ் ஹெட் (ஆஸி.) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதே அணிக்காக மற்றொரு ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித்தும் விளையாட உள்ளார். ஃபிரீடம் அணியின் புதிய பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.