நன்றி குங்குமம் டாக்டர்
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதையடுத்து 2016 -இல் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வர அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழில் சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அனுபமா தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஒர்க்கவுட்ஸ்
என்னுடைய ஒர்க்கவுட்ஸ் என்றால், அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். எனவே சிறுவயது முதலே உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறேன். காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுவேன். முதலில் யோகாவுடன் எனது வொர்க்கவுட்ஸ் தொடங்கும். பின்னர், ஸ்கிப்பிங் அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரைமணி நேரம். பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் – அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற்பயிற்சிகளாகும். பின்னர், கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சிகள் செய்வேன். இவைதான் எனது ஒர்க்கவுட் ரகசியங்கள்.
டயட்: நான் ஒரு ஃபுட்டி என்று சொல்லலாம். அதிலும் எனக்கு பிடித்த உணவுகளை நானே சமைத்து சாப்பிடுவதும், மற்றவர்களுக்கு ருசியாக சமைத்துக் கொடுப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இதனால், ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் கிச்சனில்தான் இருப்பேன். புதுசு புதுசாக சமைப்பது எனக்கு பிடிக்கும்.
என்னுடைய டயட் ரொட்டீன் என்றால், காலை உணவாக முட்டையும், அதனுடன் ப்ரோக்கோலி, கேரட், கேப்சிகம் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வேன். அதிலும் வறுத்த முட்டை எனக்கு ரொம்பவே பிடிக்கும். காலையில் முட்டை எடுத்துக் கொள்ளும்போது அன்றைய நாளுக்கு தேவையான ஆரோக்கியமான புரோட்டீன் நமக்கு கிடைத்துவிடும். அதுபோன்று, அவகோடா பழத்தை டோஸ்ட் செய்து சாப்பிடுவதும் எனக்கு பிடித்தமானது. பெரும்பாலும் எனது காலை உணவு இவைகள்தான். மதிய உணவாக வடித்த சாதம், குழம்பு, தயிர், கீரை வகைகளை சேர்த்துக் கொள்வேன். அதிலும் என் அம்மா சமைத்த சாம்பார் தனிசுவைதான். ஒரு பிடிபிடித்துவிடுவேன்.
பியூட்டி
பியூட்டி கேர் என்றால், என்னிடம் பலரும் கேட்கும் முதல் கேள்வி, சுருட்டை தலைமுடியை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதுதான். பொதுவாக, ஒவ்வொரு நபரின் தலைமுடியும் வித்தியாசமாக இருப்பதால், அவரவர், முடிக்கு தகுந்தவாறு, விதிமுறையை கடைபிடிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். அதுபோன்று, எந்தவகை முடியாக இருந்தாலும், நாம் பயன்படுத்தும் தயாரிப்புகள் தரமானதாக பயன்படுத்த வேண்டும். மேலும், முடியில் ஈரப்பதம் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
அதுபோன்று, தலைமுடி வறண்டு இருக்கும்போது, முடியை சீவினால், முடி உடைந்து போகவும், வலுவிழந்து உதிர்ந்து போகவும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் சுருள் முடியை ஈரமாக இருக்கும்போதே சீவிவிடுவதுதான் நல்லது, ஏனெனில் அது எளிதில் முடிச்சுப் போடலாம். அல்லது உலர்ந்த கூந்தலை சீவும்போது, அது முடியை உடைத்து சேதப்படுத்தும். மேலும்,தலைமுடியை உலர்த்தும் போது உறுத்தலைக் குறைக்க டிஃப்பியூசரை பயன்படுத்துவது நல்லது. அது வெப்பம் மிகவும் சமமாக பரவும் தன்மையுடையது. இதனால் முடியில் குறைந்த வெப்பமே வெளிப்படும், இது சுருள் முடிக்கு முக்கியமானது.
அதுபோல, நான் எனது தலைமுடிக்கு பயன்படுத்துவது, ஆர்கன் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்துகிறேன். இது முடியை நீரேற்றமாக வைத்திருக்கவும், வறட்சியை தடுக்கவும் உதவுகிறது. மேலும், இந்த எண்ணெய்கள் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்கவும் உதவுகின்றன.
சுருள் முடியில் வெப்ப ஸ்டைலிங் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஸ்ட்ரைட்னர்கள் மற்றும் கர்லிங் அயர்ன்கள் போன்ற கருவிகள் முடிக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, முடி இயற்கையாக எப்படி இருக்கிறதோ, அதையே பராமரிக்க வேண்டும். அதுபோன்று, பொதுவாக எந்த வகை முடியாக இருந்தாலும், இரவில் தூங்கும் போது முடி உதிர்தல் இல்லாமல் இருப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதாரணமாக, தலைமுடியைப் பாதுகாக்க, தூங்கும் போது சாடின் தலையணை உறையைப் பயன்படுத்துவது அல்லது சாடின் தொப்பியை அணிந்து தூங்குவது நல்லது.
இதைத்தவிர, எனது சரும பராமரிப்பு என்றால், அதற்கும் அர்கன் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயையே அதிகளவு பயன்படுத்துகிறேன். அதுபோன்று, தினசரி ஒருநாளுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதையும் பாரமரித்து வருகிறேன். அதுவே, சருமத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்.
The post அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்! appeared first on Dinakaran.