×

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் சரக்குக் கப்பலில் உள்ள 3 தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டு வர ஆட்சியரிடம் மனு!!

தூத்துக்குடி : ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் சரக்குக் கப்பலில் தமிழர்கள் 3 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. காசாவில் ஹமாஸ் படையினரை எதிர்த்து இஸ்ரேல் கடந்த 6 மாதமாக போரிட்டு வருகிறது. இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரானிய தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அரபிக்கடல் ஹார்முஸ் ஜலசந்தி அருகே காலை போர்த்துகிசீய நாட்டு கொடியுடன் வந்த சரக்கு கப்பலை ஈரான் கடற்படையினர் அதிரடியாக சிறை பிடித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள், அக்கப்பலை ஈரான் கடல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.இக்கப்பல் இஸ்ரேல் கோடீஸ்வரர் இயல் ஆபரின் ஜோடியாக் குழுமத்திற்கு சொந்தமானது. எனவே, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், இந்த சரக்கு கப்பலை சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. இதனிடையே  ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் உள்ள 17 இந்தியர்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

தூத்துக்குடி ஆலந்தலையைச் சேர்ந்த பிரைன்ஸ்டைன் கொந்தாஸ், புன்னக்காயலைச் சேர்ந்த மைக்கேல் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், புன்னகாயல் கிராமத்தை சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட `17 இந்திய மாலுமிகளை மீட்டு தாயகம் கொண்டு வர ஆலந்தலை கிராமத்தை சேர்ந்த கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடிப்பதால் மாலுமிகளை பாதிப்பின்றி உடனே மீட்டு தாயகம் கொண்டு வர அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

The post போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் சரக்குக் கப்பலில் உள்ள 3 தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டு வர ஆட்சியரிடம் மனு!! appeared first on Dinakaran.

Tags : Iran ,Tamils ,Israel ,Hamas ,Gaza ,Damascus, Syria ,
× RELATED குவைத் அடுக்குமாடி குடியிருப்பு...