×

24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு?: ‘இந்தியா’ கூட்டணி பலத்துடன் இருப்பதால் தேர்தல் நிச்சயம்

புதுடெல்லி: வரும் 24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், எதிர்கட்சி தலைவர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி பலத்துடன் இருப்பதால் துணை சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு நடக்கும் என்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது. முதல் இரண்டு நாட்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும். வரும் 26ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும். தொடர்ந்து 27ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அதன்பின் ஜனாதிபதி உரை மீதான விவாதங்கள் நடைபெறும். பொதுவாக மக்களவையின் சபாநாயகர், மக்களவை உறுப்பினர்களின் முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், மூத்த எம்பி ஒருவர் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவர் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பை நடத்துவார். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ேதர்வு செய்யப்பட உள்ளதால், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில் மக்களவையில் கடந்த 5 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.

எனவே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதால், அனைவரது பார்வையும் மக்களவையின் மீது உள்ளது. பொதுவாக துணை சபாநாயகர் பதவியானது எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவது வழக்கம். இதுதொடர்பாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை. இருந்தாலும் அதற்கான ஆலோசனையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், எந்த கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 99 உறுப்பினர்களை வைத்திருக்கும் காங்கிரசுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தாலும் கூட, துணை சபாநாயகர் பதவியானது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே அந்த கட்சி எது என்பது தற்போது கேள்வியாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் காலியானவுடன், மக்களவையின் இரண்டு உறுப்பினர்களை அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், அந்த சட்டப் பிரிவின்படி குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் யார் ?
மக்களவை சபாநாயகர் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. சபாநாயகர் பதவியை மீண்டும் பாஜக தக்க வைக்கும் என்றும், கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சபாநாயகர் பதவிக்காக எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சபாநாயகர் பதவிக்கு 7 முறை எம்பியாக இருந்த பாஜகவின் ராதா மோகன் சிங்கின் பெயரும், முந்தைய மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லாவின் பெயரும் அடிபடுகின்றன. மூன்றாவதாக ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி டக்குபதி புரந்தேஸ்வரியின் பெயரும் அடிபடுகிறது. இவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி ஆவார். அவரை தெலுங்கு தேசம் கட்சி எளிதில் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அவரது பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

The post 24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு?: ‘இந்தியா’ கூட்டணி பலத்துடன் இருப்பதால் தேர்தல் நிச்சயம் appeared first on Dinakaran.

Tags : India ,NEW DELHI ,Parliament ,Dinakaran ,
× RELATED பணத்தை முதலீடு செய்கிறார்கள் இந்திய...