- ருதுராஜ் லெச்சி
- டோனி
- மும்பை
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- மும்பை இந்தியர்கள்
- ஐபிஎல்
- வான்கேடே அரங்கம்
- சென்னை
- தின மலர்
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் குவித்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 69 (40பந்து), ஷிவம் துபே 66 (38 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), நாட் அவுட்டாக டோனி 4 பந்தில், 3 சிக்சருடன் 20 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷன் 23, சூர்யகுமார் 0, திலக் வர்மா 31, ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 13 ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. இதனால் 20 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றிபெற்றது. சதம் விளாசிய ரோகித் சர்மா நாட் அவுட்டாக 105 ரன் (63 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) அடித்தார்.
சென்னை பவுலிங்கில் 4 விக்கெட் எடுத்த மதீஷா பதிரனா ஆட்டநாயகன் விருது பெற்றார். 6வது போட்டியில் சென்னைக்கு இது 4வது வெற்றியாகும். மேலும் வெளியூரில் முதல் வெற்றி இதுதான். மும்பை 4வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் சென்னை கேப்டன் கெய்க்வாட் கூறியதாவது: எங்கள் இளம் விக்கெட் கீப்பர் (டோனி) கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசியதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுதான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். வான்கடே போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் எப்போதும் 10-15 ரன் கூடுதலாக சேர்க்க வேண்டும். மிடில் ஓவர்களில் பும்ரா மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதேபோல் எங்கள் பவுலர்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. எங்களின் மலிங்கா(பதிரானா) மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அவரின் யார்க்கர்கள் துல்லியமாக இருந்தது.
நான் எந்த இடத்திலும் பேட் செய்ய தயாராக உள்ளேன். கேப்டனாக அது கூடுதல் பொறுப்பு என்றே நினைக்கிறேன், என்றார். தோல்வி பற்றி ஹர்திக் பாண்டியா கூறுகையில், “இது எட்டக்கூடிய இலக்குதான். அவர்கள் நன்றாக பந்துவீசினர். பதிரானா வித்தியாசமாக இருந்தார். அவர்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தனர். ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து ஒருவர்(டோனி) சிறந்த யோசனைகளை வழங்கினார். இது அவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்தது. பதிரானா முதல் ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றும் வரை ஆட்டத்தின் மிகவும் முன்னணியில் இருந்தோம். நாங்கள் அந்த இடத்திலிருந்து யோசித்து சிறப்பான வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும். அடுத்த 4 போட்டியில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம், என்றார்.
The post எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின் ஹாட்ரிக் சிக்சர் தான் வெற்றிக்கு காரணம்: தோனி குறித்து கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.