×

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை 2 நாட்களில் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என விதி உள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் திமுக சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டு வருவதாகவும் திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பதாக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக நீட் தேர்வு ரத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

திமுகவின் விளம்பரங்களுக்கு முன் அனுமதி நிராகரிப்பது மட்டுமின்றி கால தாமதம் செய்வதாகவும், தேர்தல் ஆணையம் நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் விளம்பரங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அப்போது, தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக விதிமுறைகளை வகுத்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த விதிமுறைகளை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழு முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என விதிகள் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்த விதிகள் 2004ம் ஆண்டு தேர்தல் வரை தான் அமலில் இருந்தது எனவும் இந்த விதிகள் மூலம் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் பறிக்க முடியாது, உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரலாம் என்றும் ஆனால் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறித்துள்ளதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து 2023ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறை எதிர்த்து 10 மாதங்களுக்கு பிறகு இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்ற விதி முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் இது நிராகரிக்கப்பட்டது குறித்தும் ஏப்.17ம் தேதி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Election Commission ,Dhimuka ,Chennai ,Electoral Commission ,Dimuka ,ECOURT ,Dinakaran ,
× RELATED அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல்...