×

பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள் எங்கே?..கல்விக்கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்?: பாஜக தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து..!!

காரைக்குடி: அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மார்ச் 30ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அமைத்தனர். எப்படி 14 நாட்களில் 14 லட்சம் பரிந்துரைகளை எப்படி பரிந்துரை செய்தார்கள் என்பதை பாஜக விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை..

பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. 5 கோடி மக்கள் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிதி அயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகள் :

எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில் குழாய் எரிவாயு கொண்டு செல்வதாக கூறுவது வேடிக்கையாகும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையாக உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்பாடு 3.7 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. எரிவாயு விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள் எங்கே?:

பாஜக அரசு 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு. 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒரு மாவட்டத்தில் கட்டி இருக்கலாம். எந்த மாவட்டத்திலாவது அப்படி வீடு கட்டப்பட்டுள்ளது. கணக்கில் எழுதுகிறார்கள் …ஆனால் வீடுகள் கட்டப்படுவதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளை காட்ட முடியுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 33% மகளிர் இடஒதுக்கீடு குறித்து பாஜக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வரவில்லை. பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது என சாடினார்.

குறைந்தபட்ச ஆதார விலை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் :

வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளை பாடுவது புதிய சிந்தனை அல்ல என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

விபத்து தடுப்பு கருவிகளை வாங்காமல் புல்லட் ரயில் வாங்குவது ஏன்?

அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது.
13,169 பயணிகள் ரயில்களில் வெறும் 63 ரயில்களில் மட்டுமே விபத்தை தடுப்பதற்கான கவச் கருவி பொருத்தியுள்ளது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்ய தயாராக உள்ள பாஜக அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்தாதது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நாளுக்கு ரூ.400 தர வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிறு, குறு தொழில்களுக்கு புதிய திட்டம் என்ன?

சிறு, குறு தொழில்களுக்கு புதிய திட்டம் என்ன? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். சிறு, குறு தொழில்களுக்கு வங்கிகள் உரிய கடன் வழங்காததால் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் நிலை உள்ளதாக சாடினார்.

கல்விக்கடனை ரத்துசெய்ய மறுப்பது ஏன்?

கல்வி கடனை ரத்து செய்ய பாஜக அரசு மறுப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ரூ.11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ.க. அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து:

ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற பா.ஜ.க. வாக்குறுதிகள் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள் எங்கே?..கல்விக்கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்?: பாஜக தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து..!! appeared first on Dinakaran.

Tags : BJP government ,BJP ,Karaikudi ,Congress ,P. Chidambaram ,Former Union Minister ,Chidambaram ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...